பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் முதன்முறையாக 600 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்கி மார்ச்19-ம் தேதி முடிகிறது.தேர்வுமுடிவு ஏப்ரல் 19-ல் வெளியிடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வுக்கு மொத்தம் 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 7 ஆயிரத்து 68 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 மாணவிகள், 4 லட்சத்து ஆயிரத்து 101 மாணவர்கள், 2 திருநங்கையர்கள், 45 சிறை கைதிகள் மற்றும் 26 ஆயிரத்து 885 தனித்தேர்வா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

12 ஆம் வகுப்பு தேர்வு என்பது, இதற்கு முன்பு ஒரு பாடத்திற்கு 200 மதிப்பெண்கள் என இருந்தது. முறையை மாற்றி தற்போது ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற உள்ளது. இதன்படி பொதுத்தேர்வை மாணவர்கள் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு எழுதுவார்கள். அதேபோல மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறையை ரத்து செய்யப்பட்டு இந்த ஆண்டு ஒரே தாளுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.