பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்..! 6 ஆம் தேதி தான் ஓபன்..! மாணவர்கள் குஷியோ குஷி...! 

தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரையாண்டுத் தேர்வு முடிந்து தற்போது விடுமுறையில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நாளை பள்ளி கிளம்பத் தயாராகி வந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக மீண்டும் பள்ளி திறப்பு தேதியை ஒத்தி வைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது பள்ளி கல்வித்துறை.

அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்ததால் பள்ளி திறப்பு தேதியை மாற்றி அமைத்து நான்காம் தேதியான நாளை பள்ளி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை என்னும் பணி இழுபறியாக  இருந்து வருவதால் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்படுவதால் முதல் நாளே பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட திட்டமிடப்பட்டு  இருந்த இந்த தருணத்தில் மீண்டும்  பள்ளிகள் ஜனவரி 6 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விடுமுறை  நாட்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் பெரும்   குஷியில் உள்ளனர்.