இது கதையல்ல நிஜம்.!! மாஞ்சோலையில் நடந்த காதல் காவியம்.!!

T.Balamurukan

கும்கி யானை தான் தனக்கு உலகம் என்று  நினைத்து யானையோடு வாழ்ந்து வந்த இமானுவேல் மனத்திற்குள் கிளியோபட்ரோ வாக மனதைக் கொள்ளையடித்தார் இருதயமேரி.யானை மீது மட்டுமே காதல் கொண்ட இமானுவேல் ,ஒரு கட்டத்தில் கும்கி யானையை விட்டு தன் காதலியின் கரத்தைப் பிடித்தார் இமானுவேல். இவர்களின் காதல் கதை ரெம்பவே இன்ட்ரஸ்டானது. வாங்க அங்கே போகலாம்..,


கடல்மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்திலும், மேற்குதொடர்ச்சி அடிவாரத்திலும் அமைந்துள்ளது இந்த அழகிய மாஞ்சோலை.திருநெல்வேலியில் இருந்து 89 கி.மீ தூரம் பயணித்து கல்லிடைக்குறிச்சி வழியாக புலிகள் பாதுகாப்பு வனக்காப்பகத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள்  அனுமதி பெற்றால் மட்டுமே மாஞ்சோலைக்கு போக முடியும்.யாராக இருந்தாலும் அங்குள்ள வனபாதுகாப்புதுறை இன்,அவுட் பதிவு செய்து கொண்டு தான் அனுப்புவார்கள். இப்பகுதியில் 5 தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது.அதன் சுற்றளவு சுமார் 29 கி.மீ தூரம் அமந்துள்ளது. இந்த வனப்பகுதியிக்குள் நுழைந்தால் போதும் மனதில் ஒரு ரம்மியமான இயற்கை அழகும்,பனிமூட்டங்களும் நம்மை தழுவும். சாலைகள் கரடு முரடாக இருந்தாலும் அங்குள்ள இயற்கை காட்சிகள்,மிருகங்கள் அதையெல்லாம் பெரிதாக நினைக்க தோன்றாது. அக்னி நட்சத்திர வெயிலையும் அங்குள்ள மலை குளு,குளுவென்று வைத்திருக்கின்றது.

இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த காடுகளால் உருவான ஒரு மலைப்பிரதேசம், எண்ணற்ற மரங்கள் இருப்பினும் அக்காட்டை மாமரங்களே அதிகம் சூழ்ந்திருந்தன, அதன் காரணமாகவே அச்சோலை மாஞ்சோலை ஆனது. 

திருநெல்வேலியைச் சுற்றி இருந்த கிராமங்களில் இருந்து பல குடும்பங்கள் 'பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்' என்ற நிறுவனத்தின் மூலம் மாஞ்சோலையை தேயிலைத் தோட்டமாக மாற்றுவதற்காக அங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் இமானுவேல் என்ற கும்கி யானை பாகனும் ஒருவன். யானை மேல் கொண்ட அதீத காதலாலோ என்னவோ அவன் தான் வளர்த்த யானையை ஒரு கணமும் பிரிந்ததில்லை.

அங்கிருந்த மலை மேடுகளை, யானையைக் கொண்டு சீரமைக்கும் பொழுது அவன் மரங்களையும், செடிகளையும் மட்டும் பறிக்கவில்லை., இருதயமேரி என்பவளின் இதயத்தையும் பறித்துவிட்டான். கட்டளையின்றி காதல் இருக்குமா..? யானைப் பாகனாக இருப்பதை விடுத்தால் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அவளும் கட்டளையிட்டாள். யானை மேல் கொண்ட பயத்தினாலோ அல்லது யானையால் இவனின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்ற எண்ணத்தாலோ, இப்படி கட்டளை இட்டிருப்பாளோ ? என்ற எண்ண ஓட்டத்திலேயே அவளின் அன்பிற்கு கட்டுப்பட்டு, தான் வளர்த்த யானையை விடுத்து எஸ்டேட்டில் வேலைக்குச் சேர்ந்தான்.

அங்கு வேலை செய்பவர்களுக்கு தினக்கூலியாக அந்நிறுவனம் அளித்தது வெறும் 70 ரூபாய். அங்கிருக்கும் ஒரே முதல்நிலை மருத்துவமனையில் காய்ச்சல், தலைவலி என்று சென்றால் கூட, அம்மருத்துவச் செலவையும் அவர்களின் தின ஊதியத்திலிருந்து கழித்துக் கொள்வார்கள். அவசர காரணத்திற்காக மலையை விட்டு கீழ இறங்குவதற்கு கூட இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் பேருந்தில் 4 மணி நேரம் பயணிக்க வேண்டும். அழைப்பதற்கு கூட சிறைக் கைதிகளுக்கு கொடுக்கப்படும் எண்களை போன்று, அங்கு இருக்கும் அனைத்து மக்களையும் எண்கள் கொண்டே அழைத்தனர். இப்படியாக தொடர்ந்த வாழ்க்கையில் அழகான நான்கு குழந்தைகளையும் ஈன்றெடுத்தாள் இருதயமேரி. பொருள் என்று சேர்ப்பதற்கு ஏதுமின்றி, வாழ்வதற்கும், வளர்ப்பதற்குமே பாதி ஆயுளை இழந்தார்கள்… 
பொருள் ஈட்டவில்லை எனினும் குடும்பத்தில் ஆரோக்கியத்துடன் மகிழ்ந்தே இருந்தார்கள்…நாட்கள் உருண்டோடின… பல வருடங்கள் கழிந்தது… இப்படி மகிழ்ச்சியாக சென்ற வாழ்வில்..,

ஒரு நாள் இரவில், ஒரு யானை., கல்லிடைக் குறிச்சி அருகே வெகு நேரமாக மிகவும் சத்தமாக பிளிரிக் கொண்டு இருந்தது. அங்குள்ள பலரும் அதனை விரட்ட முயற்சித்து, தோற்றனர்., அந்த யானையின் பாகனும் அதனின் பிளிரலின் அர்த்தம் புரியாது பயந்தான்.  கோபம் கொண்ட அந்த யானை அதிக பலத்துடன் பிளிர ஆரம்பித்தது. அவ்விடமே யானையின் பிளிரல் எதிரொலியால் அதிர்ந்தது. சில மணிகள் கடந்து இமானுவேல் அந்த யானையை அருகே வந்த பொழுது, அது அவனை அப்படியே அனைத்தது.., பலர் திகைத்து போய் நின்றனர்.அனைத்த யானை அவனின் தேகத்தை நெறுக்கியது.., பலரும் செய்வதறியாது இருந்த பொழுது அந்த யானை இமேனுவேலை தூக்கி அன்பால் முத்தங்கள் பறிமாறியது. அதிர்ச்சியின் விளிம்பிற்கே சென்றவர்கள், அர்த்தங்கள் புரியாமல் திகைத்தனர். சிறு வயதில் பிரிந்த மகன் 11 வருடங்கள் கழித்து தன் தந்தையை பார்த்தால் என்ன செய்வானோ.! அது அனைத்தையும் அந்த யானை செய்தது., ஆம், இமானுவேல் 11 வருடங்களுக்கு முன்னர் வளர்த்த யானை சந்திரகுப்தன் தான் அது.., இமானுவேலும் யானையைக் கட்டித் தழுவினான், முத்தப் பரிமாற்றம் செய்தான்,  பிறகு “நீ இங்கெல்லாம் வரக்கூடாது, புரிஞ்சதா ?” என்று அன்புக் கட்டளையிட்டான்.,  கண்களின் கண்ணீரால் அந்த நீண்ட பந்தத்திற்கு பிரியா விடை கொடுத்து அங்கிருந்து புறப்பட்டான் சந்திரகுப்தன்... அருகில் இருந்த கடையில் தொங்கிய வாழைப்பழத்தை வாங்கி கொடுத்தான் இமானுவேல்..., போகும் வழிதோரும் உணர்வுகளால் எதனையோ சொல்லிக் கொண்டே திரும்பித் திரும்பி இமேனுவேலை பார்த்தபடியே சென்றான் சந்திரகுப்தன்.... 

தன்னை விட, யானை மேல் அதிக அன்பு வைத்துவிடுவானோ என்ற பயத்தில் தான்., யானைப் பாகனாக இருப்பதை விடுத்தால் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று இருதய மேரி கட்டளையிட்டிருப்பாலோ.? என்ற எண்ண ஓட்டத்திலேயே தன் வீட்டை அடைந்தான்…

மனிதனின் ஆதி மூலமே அன்பு தான். நம்மை இயக்குவதும், இவ்வுலகை இயக்குவதும், நாம் நம்மை சுற்றி பரப்பியிருக்கும் அன்பின் வேர்களும் அதன் ஆழமும் தான். அன்பிற்கு சாதி, மதம், மொழி, இனம் என்ற எந்த தடையுமில்லை என்பதன் வெளிப்பாடு தான் இது. மனிதன் உயிர்கள் மேல் வைக்கும் அன்பிற்கு பரிசாக, அவன் சந்ததியின் வாழ்க்கை அமையும் என்று முன்னோர்கள் சொல்வதுண்டு. ஆயிரம் பேர் மக்கள் தொகை கொண்ட அந்த மாஞ்சோலையில் ஐந்தாவது வரை படிக்க மட்டுமே வசதி இருந்தாலும், படிப்புகளை பட்டணத்தில் விடுதியில் தங்கி படிக்கச் செய்து  அவர்களது பிள்ளைகளான ராபர்சந்திரகுமார்,பினைக்காஷ் அகியோரை இன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களாக ஆக்கிய பெருமை அந்த அன்பான கும்கி பாகனையும் ,அவன் காதலியையுமே சேறும். 70ரூபாய் சம்பளத்தில்,கல்வியறிவு இல்லாத இவர்கள்  தன் பிள்ளைகளை சட்ட அறிஞர்களாக்கிய பெருமை, உங்களை மட்டுமே சேரும்.