This is also a type of mental illness when you thought want to be slim

ஆரோக்கியமாக இருப்பதைவிட ஒல்லியாக இருப்பது முக்கியம் என்ற மனோபாவம் தீவிரம் அடையும்போது, அது ஒர் உளவியல் பிரச்னையாக மாறுகிறது. இதையே ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்கிறார்கள்.

வரக் காரணம்?

உண்ணும் உணவால் உடல் எடை அதிகரிக்கிறது என்ற எண்ணம் மூன்று முதல் ஆறுமாதங்களுக்கு தீவிரமாக இருப்பதே ஈட்டிங் டிஸ்ஆர்டர் வரக்காரணம்.இந்தக்குறைபாடு இரண்டு வகைப்படும். ஒன்று அனோரெக்ஸியா நெர்வோசா இரண்டு புலிமியா நெர்வோசா எனப்படும்.

 அனோரெக்ஸியாவின் அறிகுறிகள்?

*பசி இயல்பாக இருக்கும் ஆனாலும் எங்கே எடை கூடிவிடுமோ என்ற பயம் காரணமாக சாப்பாட்டைத் தவிர்ப்பார்கள். 

*ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் சாப்பாட்டைத் தவிர்ப்பார்கள்.மற்றவர்களுடன் தங்களின் எடையை ஒப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். தங்களை அடிக்கடி கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

மேற்சொன்ன அறிகுறிகளோடு எப்போதும் ஒருவிதப் பரபரப்புடன் இருப்பர். அடிக்கடி உடற்பயிற்ச்சியில் ஈடுபடுவர். மேலும் சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து தங்களை தனிமைபடுத்திக் கொள்வர். இவையெல்லாம் இப்பாதிப்பின் தீவிர அறிகுறிகள்.

புலிமியா நெர்வோசாவின் அறிகுறிகள்?

உடல் எடை அதிகரிக்கும் என்ற பயத்திலேயே சாப்பிடாமல் இரண்டு மூன்று நாட்கள் இருப்பார்கள்.

பின் சாப்பிடாமல் உடலைக் கெடுக்கிறோமோ என்ற எண்ணத்தில் அதிகமாக சாப்பிடுவார்கள். சாப்பிட்டவுடன் நிறைய நேரம் உடற்பயிற்சிகள் செய்து சாப்பிட்ட உணவின் சக்தியை செலவழிப்பார்கள்.

தங்கள் உடல் எடை மற்றும் உடல் அமைப்பு பற்றிய அதிகபடியான கவலை இருந்து கொ்ணடே இருக்கும். உடல் எடை கூடிவிடுமோ என்ற பயத்தில் சரிவர சாப்பிடாததால் போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல்,ரத்தசோகை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

பொதுவாக, ஈட்டிங் டிஸ்ஆர்டர் பிரச்னை உள்ளவர்களுக்கு தங்கள் தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மை இருக்கும். உணவுப்பழக்க வழக்கங்களில் மிகவும் கண்டிப்போடும் கட்டுப்பாடோடும் இருப்பார்கள்.

தாங்கள் பார்ப்பதற்கு எடை கூடி அசிங்கமாக இருப்பதாக உணர்வதால் குடும்ப விழாக்கள் மற்றும் நண்பர்களின் திருமணம் என்று எதிலும் கலந்து கொள்ளமாட்டார்கள்.

 ஈட்டிங் டிஸ்ஆர்டர் நாள்பட்ட பிரச்னையாக உருமாறும் போது போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் ரத்த சோகை,தோல் மற்றும் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படும். உடலில் உள்ள உப்புகளின் மாறுபாட்டால் ஜீரண மண்டலப் பிரச்னைகள், மலச்சிக்கல், தைராய்டு பிரச்னை,ஆஸ்டியோபொரோசிஸ் எனும் எலும்பு அடர்த்தி குறைதல் மாதவிடாய் சுழற்சி பாதிப்பு குழந்தை பேறில் குறைபாடு என பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்பிற்கு மருந்து மாத்திரைகளை விட மனநல சிகிச்சையே முக்கியம்.

ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் இவர்களின் உணவுப் பழக்கத்தை நெறிப்படுத்துவது மட்டுமே இதற்கான சிறந்த தீர்வு. ஈட்டிங் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மையில் இருந்து வௌியே கொண்டு வர வேண்டும். இதற்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் ஒத்துழைப்பு அவசியம்.

ஒல்லியாக இருப்பது குண்டாக இருப்பது முக்கியமில்லை ஆரோக்கியமாக இருப்பதே அவசியம் என்பதை உணர வைக்க வேண்டும்.