கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக சென்னையில் குடிக்க குடிநீர் கூட இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர் மக்கள். அதேவேளையில் தமிழகத்தின் மற்ற பல மாவட்டங்களில் லேசான மழையாவது இருந்தது.. 

ஆனால் சென்னையை பொறுத்த வரையில் கடந்த மூன்று மாத காலமாகவே மழை என்பதே காணக் கிடைக்காத ஒரு விஷயமாக மாறி விட்டது. இதற்கிடையில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய சென்னையை சுற்றியுள்ள பல ஏரிகள் வறண்டு விட்டன. இதன் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

12,000 லிட்டர் தண்ணீர் ரூபாய் 7 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. அதுவும் கேட்ட நேரத்தில் தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு ஓட்டல்கள் மேன்ஷன்கள் அலுவலகங்கள் என அனைத்தும் முடங்கிப் போயுள்ளது. இதற்கு என்ன மாற்று என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒருமுறையாவது மழை வருமா என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் காண முடிகிறது. இந்நிலையில் அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் வடக்கு வங்காளவிரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போன்று அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் வெப்பநிலை இயல்பைவிட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிக வெப்ப நிலை நிலவி வருவதால் கடும் வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர் மக்கள்.

இந்நிலையில் மழை என்பதே இல்லாமல் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல்காற்று அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக வெப்பம் நிலவும் என செய்திகளை தொடர்ந்து காணமுடிகிறது. இது மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது