நாட்டுல யாரும் கவலப்படாதீங்க! நான் டெல்லியில மோடி, அமித்ஷாட்ட டீட்டெயிலா பேசிட்டேன்: செம்ம வெயிட் எடப்பாடியார் 

*    இலங்கை தமிழர்களை கொன்று குவித்த, அப்போதைய அதிபர் ராஜபக்‌ஷேவிடம் தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, டி.ஆர். பாலு போன்றோர் பரிசு பொருட்களை வாங்கினர். இதன் மூலமாக தமிழர்களுக்கு துரோகம் செய்தனர். ஆனால் இன்றோ குடியுரிமை சட்டதிருத்த மசோதா விவகாரத்தில் இப்படி இலங்கை தமிழர்களுக்காக போராடுவது போல் நடிக்கின்றனர். 
-    ஆர்.பி.உதயகுமார் (வருவாய்த்துறை அமைச்சர்)

*    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் உண்மை நிலை என்ன, அதன் அர்த்தம் என்ன? என்பதெல்லாம் தெரியாமலே ஸ்டாலின் போராடுகிறார். இதனால் குழம்பும் மக்களுக்கு உண்மையை தெரிவிப்பதற்காக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் விளக்க பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம். 
-    இல.கணேசன் (பா.ஜ.க. எம்.பி.)

*    உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால்தான், மத்திய மாநில அரசுகளின் நிதியில், கிராமப்புறங்களில் அடிப்படை வசிதிகளை செய்து கொடுக்க முடியும். 
-    வானதி சீனிவாசன் (பா.ஜ.க. பொதுச்செயலாளர்)

*    நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி மற்றும் அமித்ஷா மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த வெறுப்பின் பின்புறம் மறைந்து கொண்டு,  அவர்கள் இருவரும் அன்பிற்குரிய நம் நாட்டை பிரிக்கின்றனர். ஒவ்வொரு இந்தியர் மீதும் நாம் காட்டும் அன்பால் மட்டுமே நாம் இவர்கள் இருவரையும் வீழ்த்திட முடியும். 
-    ராகுல்காந்தி (மாஜி காங் தலைவர்)

*    புலனாய்வு துறை என்றாலே, ஜேம்ஸ் பாண்ட் படங்களை போல் துப்பாக்கி, பெண்கள் என கவர்ச்சிகரமானதாக இருக்கும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் நிஜத்தில் அப்படி அல்ல. இதுவரையில் பார்த்திராத, யாரும் கேட்டிராத பின்னணியில் செயல்படும் ஒரு அமைப்பாக அது இருக்கும். 
-    மனோஜ் நரவானே 
(லெ., ஜெனரல் இந்திய ராணுவம்)

*    குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தால், நம் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஓட்டு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சியினர் இது குறித்து நாடு முழுவதும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். மக்கள் இதை நம்ப வேண்டாம். 
-    நிதின் கட்கரி (மத்திய அமைச்சர்)

*    தி.மு.க.வின் பேரணி, முஸ்லிம்கள் மீது அக்கட்சி கொண்டுள்ள பாசத்தின் வெளிப்பாடு அல்ல. இது அக்கட்சியின் சந்தர்ப்பவாத அரசியல். அதை யாரும் நம்பி ஏமாறாதீர்கள். அவர்களை நம்பிப் போராடி, பின் வாழ்வில் நிர்கதியான மனிதர்களை இந்த வேளையில் நினைவில் கொள்ளுங்கள். 
-    பொன்னார் (பா.ஜ.க. நிர்வாகி)

*    சம்மட்டி அடியாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்தியரசு தயாரித்துள்ளது. இன்று நடக்கும் போராட்டமானது இந்திய இறையாண்மைக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான போராட்டமாகும். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்தால் முஸ்லிம்கள் பாதுகாக்கப்படுவர். நாட்டில் வாழும் ஒரு நபர், அதன் சிட்டிசன் இல்லை! என்றால், அதை அரசுதான் நிரூபிக்க வேண்டும். 
-    ப.சிதம்பரம் (மாஜி மத்தியமைச்சர்)

*    இப்போதிருக்கும் சூழ்நிலையில் அண்ணாதுரை நமக்கு மிகவும் தேவைப்படுகிறார். ஏனென்றால் அவர் இந்த காலத்தை விட இப்போது தமிழுக்கு அதிக எதிரிகள் உருவாகிவிட்டனர். தமிழர்கள் படித்து, உயரிய பதவிக்கு வருதால் பொறாமை எழுந்துள்ளது. தமிழர்கள் மீது கோபமும், வெறுப்பும் அதிகரித்துள்ளது. 
-    மு.க.ஸ்டாலின். 

*    நான் ஏற்கனவே சொன்னபடி குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் முஸ்லிம் மக்களிடையே, சிலர் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர். அதை நம்ப வேண்டாம். இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்! என்பது குறித்து சமீபத்தில்  நான் டில்லி சென்றிருந்த போது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் இந்த கோரிக்கையை நான் வலியுறுத்தினேன். 
-    எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)