நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பாக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் அவர் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். இவரது இந்த சேவையை பாராட்டி அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் இரவு பகல் பாராமல், வெயில் மழை என எதை பற்றியும் கவலை கொள்ளாமல், பம்பரம் போல் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தூத்துக்குடி மக்களிடம் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பாஜக செய்த பல நல்ல திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தார். மீண்டும் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர ஆயத்தமாகி வருவதாகவும், தூத்துக்குடியில் வெற்றி பெறும் பட்சத்தில் எண்ணிலடங்கா பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் பிரச்சாரத்தின் போது அவர் பயணித்த பல்வேறு கிராமத்தில் அன்பு மழை பொழிந்த மக்களைப் பார்த்து அவர்கள் படும் இன்னல்களை ஒரு மருத்துவராக உணர்ந்து கண்டிப்பாக இலவச மருத்துவ முகாம்  நடத்துவேன் என கூறியிருந்தார். குறிப்பாக குலசேகரநல்லூர் என்ற இடத்தில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என தேர்தலுக்கு முந்தையே தெரிவித்து இருந்தார். பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழிசை வெற்றி பெறவில்லை என்றாலும், குலசேகரநல்லூர்  மக்களுக்கு தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டுமென, தற்போது வரும் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் இலவச சிறுநீரக மற்றும் பொது நல சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.

இந்த நிகழ்வில் சிறப்பு மருத்துவராக சிறுநீரக சிறப்பு  மருத்துவரான தமிழிசையின் கணவர் மருத்துவர் சவுந்தரராஜன் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் , ஓட்டப்பிடாரம் தாலுக்காவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆரம்ப பாடசாலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழிசையின் இந்த உயரிய மனப்பான்மையை தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.