மதுரை சித்திரை திருவிழா உலகம் போற்றும் உன்னதமான தமிழர்களின் கலாச்சார திருவிழா. அப்படிப்பட்ட திருவிழா சத்தமில்லாமல் அழகர்கோவிலில் அமைதியாக நான்கு சுவற்றுக்குள் எந்த விதமான ஆரவாரம் இல்லாம் நடந்து முடிந்திருக்கிறது.


பட்டிதொட்டிகளில் இருக்கும் கிராம மக்கள் வண்டி மாடு பூட்டிக் கொண்டு,கிடா வெட்டி கருப்பண சாமிக்கு படையல் போட்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, மக்கள் மகிழ்ச்சி பெரும் திருவிழா தான் சித்திரை திருவிழா. கள்ளழகர் மதுரைக்கு புறப்பட அழகர் மலையை விட்டு கீழே இறங்கி விட்டாலே மக்கள் கொண்டாத்தில் குத்திதுவிடுவார்கள். அப்பன் திருப்பதி,கள்ளந்திரி,மூன்றுமாவடி,புதூர், டி.ஆர்.ஓ காலணி வழியாக வந்து ரிசர்வ்லைனில் மதிய சாப்பாடு முடித்துக் கொண்டு மாலை பொழுதில் தல்லாகுளம் பெருமாள் கோயில் சென்று அங்கே  தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகராக அவதாரம் எடுத்து விடுவார்.  தல்லாகுளம் கருப்பணச்சாமி கோயில் முன்பு திரி ஆட்டக்காரர்கள் அருள் சொல்லுவதும்,ஆட்டுத்தோலில் பக்தர்கள் தண்ணீர் பீச்சியடிப்பதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த கூட்டத்தின் நடுவே இளம் காளையர்கள் பலூன் பீப்பி வாங்கி ஊதுவதும்,இளம்பெண்களை அலறி ஓடவிடுவதும் அது ஒருவகையான குஷிதான். இந்த நேரத்தில் வாறாரு ... வாறாரு....கள்ளழகர் வாறாரு..... பாடல் ஒவ்வொருவரையும் பரவசமூட்டும். திரும்பிய பக்கமெல்லாம் மக்களின் தலைகள் மட்டுமே தெரியும். விடிய விடிய சாப்பாடு கிடைக்கும் ஒரு திருவிழா என்றால் அது சித்திரை திருவிழா தான்.அழகர் மதுரையை விட்டு போகும் வரை மதுரை மக்களுக்கு சாப்பாட்டுக்கு பஞ்சம் இருக்காது.அதுவரைக்கும் ஒவ்வொரு பக்தர்களின் வயிறும் நிறைந்து இருக்கும்.

 


இப்படிப்பட்ட சித்திரை திருவிழா கொரொனா வைரஸ் என்கிற கொடிய தொற்று நோயால் முடங்கிவிட்டது. இந்தாண்டு சித்திரை திருவிழா நடைபெறாமல்  போனால் அது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. என்கிற  சோதிடர்களின் ஆலோசனையால் அழகர்கோயில் மண்டபத்திலேயே கள்ளழகர் உள்ளிட்ட சாமிகளுக்கு  பட்டர்களால் பூஜை செய்யப்பட்டிருக்கிறது.அதற்கான வீடியோ லிங் கீழே..... பக்தர்கள் பார்த்து மகிழுங்கள்.....