Sunset Reclamation and Remedies
திருநள்ளாறு:- “பச்சைப்பதிகம்” பெற்ற புண்ணிய ஸ்தலமான “திருநள்ளார்” சென்று “நள தீர்த்தத்தில்” நள் எண்ணெய் தேய்த்து நீராடி பின் அங்கு உள்ள சனி பகவான் சந்நிதியில் எள் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வர நலம். இங்கு சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாவார். இங்கு வந்து வழிபடுபவர்களுக்கெல்லாம் அவர் அனுக்கிரகம் பண்ணுகிறார்.
திருநாரையூர்
நாச்சியார் கோவில் அருகே திருநாரையூர் என்ற ஊரில் தசரத மஹாராஜவுக்கு குடும்ப சகிதமாக மேற்கு நோக்கி தன் இரு மனைவிகளுடன் சனிபகவான் காட்சியளிக்கிறார். இங்கே சனிபகவான் தன்னுடைய வலதுபக்கம் ஜேஷ்டாதேவி என்ற நீலாதேவியுடனும் இடப்பக்கத்தில் மந்தா தேவியுடனும் மந்தா தேவிக்கும் சனிக்கும் பிறந்த தன் இரு குழந்தைகளில் குளிகன் மாந்தியுடன் காட்சியளிக்கிறார். இத்தலத்திற்கு வாய்ப்பிருந்தால் குடும்ப சகிதமாகச் சென்று சனி பகவானுக்கு எள் விளக்கேற்றி அபிஷேக அர்ச்சனை செய்து வர நன்மைகள் ஏற்படும்.

திருக்கொள்ளிக்காடு
இத்தலம் திருவாருக்கு அருகில் திருத்துறைப் பூண்டியில் விக்ரபாண்டியம் என்ற கிரமாத்தில் உள்ளது. இங்கு சனிபகவான் “பொங்கு சனியாக” காட்சி தருகிறார். இது “அக்னி தலம்” ஆகும். அதனால் தான் இத்தலத்திற்கு “திருக்கொள்ளிக்காடு” என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிவனுக்கு “அக்னீஸ்வரர்” என்றும் அம்பாளுக்கு மிருதுபாதநாயகி என்றும் பெயர். சனியானவர் தான் வழங்கும் நல்ல பலன்களை தேவர்கள் முதல் மனிதர்கள் வரை எண்ணிப் பார்க்காமல் தான் வழங்கும் தீய பலன்களை மட்டுமே நினைத்து பயப்படுவதால் மிகவும் மனம் வருந்தி விசிஷ்டரின் யோசனைப்படி அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்யலானார். இவரது கடுமையான தவத்திற்கு மனமிறங்கிய சிவபெருமான் அக்னி உருவில் வந்து தரிசனம் தந்து சனியை “பொங்கு சனியாக” மாற்றினார். அத்துடன் இத்தலம் வந்து தன்னையும் பொங்கு சனியையும் வழிபடுவோர்க்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் எனவும் அருள்புரிந்தார்.


4800 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் என்று புராணத்தில் இத்தலம் தாருகாவனம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள குளத்தில் நீராடி சனி பகவானுக்கு எள்விளக்கேற்றி அர்ச்சனை ஆராதனை செய்து வர விரும்பியது நடந்தேறும்.
இத்தலம் மயிலாடுதுறை மங்கநல்லூர் நெடுஞ்சாலை எலத்தங்குடி என்ற ஊருக்கு அருகில் நெய்க்குப்பையில் இறங்கி வழுவூர் செல்லலாம்.
சனி பிடிக்காத விநாயகருக்கு அடுத்தபடியாக உள்ள ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி வெற்றிலைமாலை வடைமாலை சாற்றி அர்ச்சனை செய்து வரலாம். அனுமார் சாலிசா அனுமார் ஸ்தோத்திரம் செய்து வர தைரியம் விவேகம் ஏற்பட்டு நினைத்த காரியங்கள் நடந்தேற வாய்ப்பு ஏற்படும்.
சனிக்கிழமை சனி பகவானுக்கு எள்விளக்கேற்றி வில்வ இலை மல்லிகைப்பூ அல்லது வாசனைப் பூக்களால் அர்ச்சனை செய்யலாம். வாய்ப்பிருந்தால் கருங்குவளை மாலை வன்னி இதழ்களால் அர்ச்சனை செய்தால் மிகுந்த நன்மையுண்டாகும்.
சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து எள் சாதம் செய்து வழிபட்டு மற்றவர்களுக்கு விநியோகிக்கலாம்.
சனிக்கிழமை தோறும் காகத்திற்கு அன்னம் இடுதல் சிறப்பானதாகும். சனிக்கிழமை “பெருமாளையும்” “ஸ்ரீ கிருஷ்ணரையும்” வணங்கிவருதல் நலம். கருட தரிசனமும் சிறப்பானதாகும்.
சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம் செய்யலாம்.
நல்ல உடல் ஆரோக்யம் இருப்பின் சனிக்கிழமை விரதம் இருந்து வருதல் சிறப்பானது.
பிரதோஷ காலத்தில் சிவன் மற்றும் நித்தியம் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வருவது சிறப்பானது ஆகும்.
காலை மாலை கோயில் சென்று நவக்கிரகங்களை வழிபட்டு வரலாம்.
சனிபகவான் காயத்ரி, சனி கவசம், சனிபகவான் அஷ்டோத்திரம் சொல்லி வர சிறப்பானது ஆகும்.
நள சரித்திரம் படிக்கக் கேட்க தசரதச் சக்கரவர்த்தி அருளிய சனி ஸ்தோத்ரம் சொல்லுதல் நன்று
சிவபுராணம் படித்தல் பஞ்சாட்சரம், ஜெயித்தல், சுதர்சன மூலமந்திரம் கூறுதல் நலம்.
இராமாயணம் மகாபாரதம் ஸ்ரீமத்பாகவதம் ஆகிய புராணங்களைக் கேட்டல் அல்லது வாசித்தல் நலம்.
தேவாரம் திருவாசகம் திவ்ய பிரபந்தங்கள் பாட அல்லது பிறர் இசைக்க கேட்டல் நலம்.
சாஸ்த்தா, ஐயனார், ஐயப்பன் கிராமத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்து வருதல் நலம்.
ஏழைகளுக்கு உதவுதல் மற்றும் முதியோர்களுக்கு உதவி செய்தல். தான தர்மங்கள் செய்தல்.
உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுதல்.
முத்தோர்களுக்கு திதி சரியாகக் கொடுத்தல்.
அன்னதானம் செய்தல், கோவில் திருப்பணிகளுக்கு உதவுதல்
வேலையாட்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் காவலாளிகள் பிச்சைக்காரர்கள் இவர்களுக்கு உதவி செய்தல் நோயுற்றவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் தாய் தந்தையரைப் போற்றிப் பேணுதல்.
புலால் உணவை தவித்து சைவ உணவுகளை உண்ணுதல்
இறை சிந்தனை மற்றும் சித்தர்கள் மகான்கள் யோகிகளை வழிபடுதல் ஜீவ சபாதிகளுக்குச் சென்று வழிபாடு செய்தல். எல்லாவற்றிற்கும் மேல் குலதெய்வ வழிபாடு மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம் அவரவர் ஊரின் அருகில் உள்ள சிவன் கோயிலில் உள்ள தனிச்சந்நிதிகளில் உள்ள சனிபகவான வழிபாடு நடத்துதல் சிறப்பானது ஆகும் .
பிரசத்தி பெற்ற தனிச்சந்நிதி உள்ள ஒரு சில ஊர்கள் மதுரை அருகே திருவாதவூர், திருப்பரங்குன்றம், சோழவந்தான், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், கொடுமுடி, திருச்செங்கோடு, திருச்சி, உறையூர், வெக்காலி அம்மன், திருவனைக் காவல், திருவாரூர், திருவையாறு, திருக்கொள்ளிக்காடு, ஆலங்குடி, ஒமாம்புலியூர், திருக்கோயிலூர் போன்றவை ஆகும்.
அவரவர் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அத்துடன் பொருளாதாரத்த்துக்கு தக்கவாறு சனிபகவானை வணங்கினால் போதுமானது. ஆடம்பரமில்லாமல் மனத் தூய்மையுடன் எது செய்யினும் மனமகிழ்ச்சியுடன் ஏற்று பலன் அளிப்பதில் சனிக்கு நிகர் சனியே ஆவார்.
உண்மை ஒழுக்கம் நேர்மை சத்தியம் தவறாமல் இருந்தாலே சனியின் அனுக்கிரகம் நம்மைத் தேடி வரும்.
கிழே குறிப்பிட்டுள்ள சனிபகவானின் காயத்ரி மந்தரத்தையும், பீஜ மந்திரம், புராண மந்திரம் பிற மந்திரங்களையும் கூறி வர அவரது அனுக்கிரகத்தை அடையலாம்.
