சின்னத்திரையில் ஜொலிக்க நிறம் ஒரு தடை இல்லை, என்பதை சன் டிவியில் ஒளிபரப்பாகும் ''சுந்தரி'' சீரியல் நடிகை கேப்ரியல்லா நிரூபித்து காட்டியுள்ளார்.
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் சுந்தரி, கருப்பாக உள்ள பெண்ணை மையமாக கொண்டு கதைமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் நடிகை ‘கேப்ரியல்லா செல்லஸ்’ சுந்தரி, கதாபாத்திரத்தில் ஏற்று நடித்து வருகிறார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவுகளோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து வரும் பெண் தான் சுந்தரி கதாபாத்திரம். குறிப்பாக, அவரின் கருப்பு நிறத்தால் அவருடைய கணவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார், அதை சுந்தரி எவ்வாறு எதிர் கொள்கிறார் என்ற தொனியில் கதை நகர்கிறது.

பொதுவாக நம் நாட்டில், மென்மையான நிறம் கொண்டவர்கள் மட்டுமே இந்திய திரைத்துறையில் பிரபலமாக இருக்க முடியும் என்று காட்டுபவையாக, திரைப்படங்கள், விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன. மென்மையான நிறத்தில் தோல் இருக்கும் பெண்களுக்கு எளிதில் வேலை கிடைக்கிறது, திருமணம் அமைகிறது, அல்லது மகிழ்வாக இருக்கிறார் என்பதைப் போல, தோல் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தொலைக்காட்சி விளம்பரங்கள் காட்டுகின்றன.
வரலாற்று ரீதியாக, பல்வேறு சமுதாயங்களில் `கறுப்பு' நிறம் கெட்ட அம்சமாக பார்க்கப்படுகிறது. கருப்பாக இருக்கும் மக்கள் `அழுக்காக' அல்லது குறைந்த கல்வி கற்றவர்களாக இருப்பார்கள் என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் மனநிலையும் அவ்வாறே கடந்து செல்கிறது. இதனால் பெரும்பாலான `கறுப்பு' நிறம் கொண்ட பெண்களுக்கு மன ஆரோக்கியம் பாதிக்கிறது.
நம் தமிழகத்தில் கூட, சினிமா துறையின் வெளி இடங்களில் இருந்து வரும் பெண்களுக்கு கிடைக்கும் அந்தஸ்து. நம் மாநிலத்தில் இருக்கும் பெண்களுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக, நிறம் அதற்கு ஒரு முக்கிய தடையாக இருக்கிறது. இதனால் கருப்பாக இருக்கும் பெரும்பாலான, பெண்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் நழுவி போகிறது.
இந்நிலையில், சினிமா துறையில் ஜொலிக்க, நிறம் ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து காட்டி வருகின்றனர் சின்னத்திரை நடிகைகள். விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில்,கண்ணம்மாவாக நடிகை ரோஷினி ஹரிபிரியன் தாஸ் நடித்ததார். இவர், சின்னத்திரையில், கருப்பாக இருந்தாலும் மக்களின் வரவேற்பை பெற்று ஜொலிக்கும் நடிகையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தற்போது சுந்தரி சீரியலில் நடிகை ‘கேப்ரியல்லா செல்லஸ்’இணைந்துள்ளார். ஏனெனில், சுந்தரி தொடர் தான் தற்போது, TRP-ல் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
டிக்டாக் பிரபலமாக வலம் வந்த நடிகை கேப்ரியல்லா, கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த நடிகை நயன்தாராவின் “ஐரா” திரைப்படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். தற்போது அவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், ஒரு மாடலாகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அறியப்பட்டு வருகிறார். இவர் உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் நிறத்தின் முக்கியத்துவம் வைத்து ஏராளமான டிக்டாக் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘கேப்ரியல்லா செல்லஸ்’மற்றொரு அங்கீகாரம் என்னவென்றால், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் கேப்ரியல்லா செல்லஸ்-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர தொங்கியுள்ளார். 6.1 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டுள்ள ஏ.ஆர்.ரகுமான் வெறும் 64 நபர்களை தான் பின் தொடர்ந்து வருகிறார். அதில் தற்போது ஒருவராகியுள்ளார் கேப்ரியல்லா செல்லஸ். இதை உறுதிப்படுத்தியுள்ள கேப்ரியல்லா, “இது ரொம்ப பெரிய விஷயம் சார். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
