ஏலகிரி குரங்குகளை காப்பாற்றும் மாணவர்கள்..! இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்லும் 35 லிட்டர் ஸ்பெஷல் வாட்டர்..! 

வேலூர் மாவட்டம்  ஏலகிரி மலையை ஏழைகளின் ஊட்டி என செல்லமாக அழைப்பது வழக்கம்.இந்த மலையில் கோடை காலங்களில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா செல்வார்கள் மக்கள். இது ஒரு பக்கம் இருக்க... மற்றொரு பக்கம் கோடை காலத்தில் தண்ணீர் இன்றி மிகவும் பரிதவித்து வருகிறது. ஏலகிரி மலையில் வசிக்கும் குரங்குகள் மற்றும் சில விலங்குகள்.

இதனை அறிந்த ஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்தவர்கள் பகவத் மற்றும் அவருடைய அண்ணன் புகழேந்தி ராஜா இருவரும் இயற்கையை சீரமைத்தல் குழு என்ற அமைப்பை தொடங்கி குரங்குகளுக்கு வாரம்தோறும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு வருகின்றனர்.

குரங்குகள் அதிகம் உள்ள ஏலகிரி மலையின் வளைவு பகுதிகளில் ஒவ்வொரு இடத்திலும் இதற்கான தொட்டியை கட்டி வாரம் தோறும் சென்று தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.  ஒவ்வொரு இருசக்கர வாகனத்திலும் 35 லிட்டர் கேனில் தண்ணீர் பிடித்துக் கொண்டு குரூப்பாக ஏலகிரி மலைக்கு சென்று இந்த சேவையை செய்து வருகின்றனர்.

இது குறித்து பகவத் என்பவரிடம் விசாரித்தபோது, "அப்துல் கலாம் இறந்த அன்றைய தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அதோடு நிற்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டோம். அந்த வகையில் ஆரம்பித்ததுதான் இந்த குரங்குகளை காப்பாற்றக்கூடிய ஒரு முயற்சி... என்னுடைய மகள் காவியா ஓவியா எழில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வார இறுதியில் இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம். இதற்காக யாரிடமும் பணம் வாங்குவது கிடையாது. பெட்ரோல் மட்டும்தான் செலவு.அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் ஓர் உதாரணமாக இருக்க வேண்டும் என ஆசை படுகிறோம்.

ஏலகிரி மலையில் அனைவரும் அறிந்த முத்தனூர் என்ற குளம் இருக்கு.இதுல இதுநாள்வரை காட்டு விலங்குகள் மட்டுமே தண்ணீர் குடித்து வந்தது ... தற்போது அந்த குளத்தை தூர்வாரி உள்ளதால் அந்த குளத்தை சுற்றி வசிக்கக்கூடிய 100 நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்து வருகின்றனர். இது எங்களை பெருமை அடைய செய்துள்ளது. "எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது' என தெரிவித்துள்ளார்.

கோடை வெயிலில் வெளியில் செல்லவே மிகவும் சிரமப்படும் நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏலகிரி மலைக்கு இந்த ஒரு குடும்பம் தன்னந்தனியாக குரங்குகளுக்காக சேவையாற்றி வருவது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது