டெல்லியில் ஆட்சி செய்த முகலாய மன்னர் ஒருவர் இரவில் பிச்சை எடுத்ததாகச் சொல்லப்படும் உண்மையான பின்னணியை காணலாம்.
குஷாணர்கள், குப்தர்கள், முகலாயர்கள், பாமினி, விஜய நகர பேரரசு, சேர, சோழ, பாண்டியர், பல்லவர்கள் என இந்திய வரலாற்றில் பல மன்னர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முகலாயர்களுக்கும் குறிப்பிடத்தக்க இடமுள்ளது. ஆனால் அவர்களின் வீழ்ச்சி பரிதாபகரமானது. பகதூர் ஷா ஆட்சி வீழ்ச்சிக்கு பின், அவர் சந்ததியில் வந்த ஜாபரின் இளவரசர் பிச்சை எடுக்கும் அவலம் கூட நேர்ந்தது. டெல்லி தெருக்களில் இரவில் பிச்சை எடுத்த அந்த முகலாய இளவரசர் யார்? அவர் பின்னணி என்ன என்பதை இங்கு காணலாம்.
ஒரு காலத்தில் கம்பீரத் தோரணை, அதிகார மிடுக்குடன் எல்லா சாம்ராஜ்யம் போலபே முகலாயப் பேரரசும் கோலோச்சியது. ஆனால் இந்தியாவில் பிரிட்டிஷார் தலைதூக்க ஆரம்பித்தபோது கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஆங்கிலேயர்கள் முதல் வணிகத் தலத்தை இந்தியாவில் அமைக்க அனுமதி கொடுத்ததே முகலாய மன்னர் ஜஹாங்கீர் தான். கடைசியில் முகலாயர்களை அடியோடு வீழ்த்தியது ஆங்கிலேயர்கள்தான். அதிலும் கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா ஜாபர் பல இன்னல்களை சந்தித்தார். 1857ஆம் ஆண்டு நடந்த பெருங்கலகப் புரட்சிக்குப் பின் தன் அரியணையை முற்றிலுமாக இழந்தார். சரணடைந்த அவரை, பிரிட்டிஷார் பர்மாவிற்கு நாடுகடத்தினர். முகலாய வம்சத்தின் பேரும் புகழும் முற்றிலும் குறையத் தொடங்கியது.
முகலாயப் பேரரசு வீழ்ந்த சமயத்தில், அந்த சந்ததியினரின் வாழ்க்கையே இருள்மயமானது என்றே சொல்லலாம். செங்கோட்டையில் பிறந்து வளர்ந்த இளவரசர் மிர்சா ஜவான் பக்த். இவர் ஒருவேளை உணவுக்காக யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரே இரவில் ஒன்றும் பிச்சைக்காரன் ஆகவில்லை. பகதூர் ஷா ஜாஃபருக்கு பிறந்த இவர், பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, மோசமான நிலையை அடைந்தார். வயிற்றுப் பசியாற்ற இரவில் டெல்லியின் தெருக்களில் பிச்சை எடுப்பாராம். தனது அரச அடையாளம் தெரியக் கூடாது என இருட்டில் தான் வெளியே செல்வாராம்.
குவாஜா ஹசன் நிஜாமியால் எழுதப்பட்ட 'பேகுமத் கே ஆன்சு' என்ற புத்தகத்தில் பகதூர் ஷா ஜாஃபரின் பேரனான இன்னொரு இளவரசர் கமர் சுல்தான் பகதூர் பற்றிய தகவல்கள் உள்ளன. இந்தப் புத்தக குறிப்புகளின்படி, கமர் சுல்தானும் தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டாராம். சாப்பிடக் கூட பணம் இன்றி சிரமப்பட்டுள்ளார்.
முகலாயர் ஆட்சியில் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் நடந்தன. கலை, இலக்கியம், ராணுவம் என பல துறைகளிலும் சிறந்துவிளங்கினர். அவர்கள் ஆட்சியில் நீதிமன்ற அரசியல் இருந்தது. ஆனால் காலத்தின் சுழலில் 1857ஆம் ஆண்டு பெருங்கலகம் அவர்களின் புகழை மொத்தமாக சரித்தது. நிரம்பி வழிந்த கஜானாக்கள் வெறுமையாக தூசி படிந்து வறுமையில் அவர்களை மூழ்கடித்தது. முகலாய இளவரசர்கள் வரலாற்றின் கருப்புப் பக்கங்களுக்குள் தள்ளப்பட்டனர். அவர்களின் மரபும், பேரரசின் மகத்துவமும் தனிச்சிறப்புடையதாகும். இருப்பினும் பிரிட்டிஷார் ஆட்சியில் அனைத்தும் மாறிவிட்டது. பசியாற்ற யாசகம் வாங்கியதாக சில தகவல்கள் கூறுகின்றன.
