வாழ்வை இழந்து கதிகலங்கி நிற்கும் ஸ்டெர்லைட் தொழிலாளர்கள்...! 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மக்கள் ஒரு பக்கம் வரவேற்பு தெரிவித்தாலும் அதே வேளையில் ஸ்டெர்லைட் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகி உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி சென்ற ஆண்டு நடத்திய போராட்டத்தின் முடிவில்,போலியான போராளிகள் ஊடுருவலால் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில்13 பேர் பலியாகினர். அதன் பின்னர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்து, அன்று முதல் இன்று வரை மூடப்பட்டு உள்ளது. இது குறித்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அதே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்த பல்லாயிர கணக்கான மக்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்வி குறியாகி உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி சென்ற வாரம் மனு கொடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து ஸ்டெர்லைட் ஆதரவு மக்கள் கூறுவது! "பீஸ் கட்ட முடியல... வாடகை கொடுக்க திராணி இல்ல"

"ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் வேலையை இழந்து தவிக்கிறோம், கடந்த 7 மாதமாக மாற்று வேலைக்காக போராடி போராடி வாழ்க்கையையே வெறுத்து இருக்கிறோம்.. ஸ்டெர்லை ஆலையில் பணிபுரிந்த போது எங்கள் குடும்பத்தை சரி வர நடத்த முடிந்தது..ஆனால் இன்று வேலை இல்லாமல், வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம்...


 
திடீரென ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்டதால், எங்களுக்கு வேறு வழி என்ன..? அரசுக்கு இது பற்றி தெரியாதா..? மாநில அரசும் மத்திய அரசும் எங்களுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாவது ஸ்டெர்லை ஆலையை மூடுவது குறித்து முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் அப்படி இல்லாமல் ஆலையை மூடியதால் பெரும் சிரமத்தில் உள்ளோம்... 

1500 பேர் இந்த நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். 18 ஆயிரம் பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், மறைமுகமாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பெருமளவு  பாதிக்கப்பட்டு உள்ளனர். நாங்கள் எங்கு வேலைக்கு சென்றாலும், இப்போதைக்கு வேலை இல்லை என்றே கூறுகிறார்கள்.. எங்கள் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது... எனவே மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறந்தால் நன்றாக இருக்குமென கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால், உச்சநீதிமன்றமோ ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என தீர்ப்பு அளித்துள்ளது.  

போராட்டத்தில் ஈடுபட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்த மக்களும் தூத்துக்குடி தான்... ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாழ்வாதாரத்திற்காக கதிகலங்கி நிற்கும் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடமும் அதே தூத்துக்குடி தான்..

இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது கிடைக்கும் விடிவு காலம்..? மாற்று வேலைக்கு அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்தே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் அடங்கி உள்ளது என்கின்றனர் மக்கள்.