பெற்றோர்களை கைவிட்டால்  6 மாதம் ஜெயில் கன்பார்ம்...! மத்திய அரசு தடாலடி..! 

வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கைவிட்டால் அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.

வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் மாறி வரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப இன்றைய இளம் தலைமுறையினர் பெற்றோருடனான உறவுகளில் கூட அடுத்தகட்ட மாற்றத்திற்கு சென்று விட்டனர் என்றே கூறலாம். அதாவது முன்பெல்லாம் கூட்டுக் குடும்பம் என்று ஒரு விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று அதனை கூட்டுக்குடும்பம் என்றால் என்ன? அதனுடைய விளக்கம்.. உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஒரு விஷயத்தை புத்தகத்தில் படிக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

அதாவது இன்றைய இளம் தலைமுறையினர் தனிக்குடித்தனம் இருப்பதற்கே விருப்பம் தெரிவிக்கின்றனர். அதன்படியே அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப விரும்பிய ஊரில் வசித்து வருகின்றனர். ஆனால் பெற்றவர்களை கவனிப்பதில் பெரும்பாலானோர் உதாசீனப்படுத்தி விடுகிறார்கள் என்றே கூறலாம். நம்மைப் பெற்றெடுத்து படிக்கவைத்து நமக்காக எவ்வளவோ அவர்களின் வாழ்க்கையில் தியாகம் செய்து இன்று ஓர் நல்ல இடத்தில் வேலையில் அமர்ந்து அருமையான வாழ்க்கையை பெற்றோர்கள் அமைத்து கொடுத்து இருந்தாலும், அவர்களுடைய வயதான காலத்தில் உடனிருந்து கவனித்துக் கொள்வதில் இன்றைய இளம் தலைமுறையினர் தவிர்க்கின்றனர்.

இதனால் வயதான காலத்தில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் பெற்றோர்கள். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தவறான முடிவுகளும் எடுக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு விஷயம்  பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன்பேரில் சமூகநல மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம், இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளது. பின்னர் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007 இன் படி, பெற்றோர்களை உடனிருந்து கவனிக்காமல் கைவிட்டுவிட்டால் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்க முடியும். இதில் சற்று மாற்றம் கொண்டு வந்து மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் வயதான பெற்றோர் அல்லது  மூத்த குடிமக்களை பாதுகாக்கும்  கடமை யாருக்கெல்லாம் உண்டு? என்பது குறித்து பொது வரவையும் கொண்டுவந்து உள்ளது. இதற்கு முன்னதாக மகன்கள் மகள்கள் பேரக் குழந்தைகள் மட்டுமே சட்ட வரம்புக்குள் இருந்தார்கள். ஆனால் புதிய சட்ட வரைவின் படி, தத்து குழந்தைகள் மற்றும் மகன்கள் மருமகள்கள் பேரக்குழந்தைகள் ஆகியோரும் மூத்த குடிமக்களை அதாவது பெற்றோர்களை பாதுகாக்க கடமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர்த்து பராமரிப்பு தொகையாக மாதம் ரூபாய் 10,000 என தற்போது இருக்கிறது. இப்போது இந்த வரம்பு நீக்கிவிட்டு பிள்ளைகள் நல்ல சம்பளம் பெறும் தருவாயில், அவர் அந்த சம்பளத்திற்கு ஏற்ப பராமரிப்பு தொகையையும் அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என புதிய சட்ட வரைவு எடுத்து வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களை பாதுகாக்காமல் முறையாக கவனிக்காமல் கைவிட்டால் அவர்களுக்கு மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதம் சிறை தண்டனை கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.