சூரிய கிரகணம்...! 6 கிரகங்களின்சேர்க்கை... நடக்கப்பபோவது என்ன..? 

இன்று முதல் 27ஆம் தேதி முடிய மூன்று நாட்களுக்கு ஆறு கிரகங்கள் ஒன்று சேர்வதால் ஒருவிதமான அச்சம் நிலவுகிறது.

அதன்படி சந்திரன், சூரியன், குரு, சனி, புதன், மற்றும் கேது ஆகிய ஆறு கிரகங்கள் ஒன்றாக சேரும் போது ராகுவின் பார்வையை பெறுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஜோதிடர்கள் ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பது குறித்து ஆர்வமாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

இந்தநிலையில் ஜோதிடர்கள் கூறும் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சூரிய கிரகணத்தால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் கோள்கள் சூரியனை தங்கள் சுற்றுப்பாதையில் சுற்றி வருவது இயல்பான ஒன்று. எனவே அவ்வப்போது கோள்கள் ஒன்று சேருவது நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு தான். இதனால் பூமியில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 முதல் எட்டாம் தேதி வரை அதாவது ராகு தவிர மற்ற கிரகங்கள் மகர ராசியில் ஒன்று சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுகூட உலகம் அழிந்து விடும் என சில ஜோதிடர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்தும் பல ஜோதிடர்கள் தங்களது கருத்தை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிரகதோஷம் எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்க நடிகை பானுமதி வீட்டில் யாகம் நடத்தி உள்ளார். இதுதவிர நடிகை அஞ்சலி தேவியும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போதைய அமைச்சர் பக்தவச்சலம் கோவில்களுக்கு சென்று நவக்கிரகங்களை சுற்றி சாமி தரிசனம் செய்தது உண்டு என்பது மேலும் கூடுதல் தகவல்.

இதெல்லாம் தவிர கிரகங்கள் ஒன்று சேரும் தருணத்தில் மீனவர்கள் கடலுக்கு போகாத நிலையும் உண்டு என்பதை இங்கு நாங்கள் பதிவு செய்கிறோம். அதாவது கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இதுபோன்ற தருணத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் என சென்னையின் பல முக்கிய இடங்களில் தங்கிவிடுவார்கள். குழந்தையை வீட்டை விட்டு வெளியே கூட அனுப்ப மாட்டார்கள் பெற்றோர்கள். அவ்வளவு ஏன் ரயில் பேருந்து என வெளியில் பயணம் செய்ய கூட சற்று பயந்து கூட்டம் குறைவாக இருந்த காலகட்டமும் உண்டு. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அந்த ஒரு காலக்கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேரு கூட நம் எதிர்காலத்தை நாம் தான் முடிவு செய்கிறோம். கிரகங்கள் முடிவு செய்வதில்லை. பயப்பட வேண்டாம் என தெரிவித்து இருந்தார். அதேபோன்று கொடுமுடி மடாதிபதியும் எட்டு கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் உலகம் அழியப் போவதில்லை... கவலைப்பட வேண்டாம் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது