பாராசிட்டமாலை எடுத்து கொள்வது மிக பாதுகாப்பானது என்ற எண்ணம் மக்களிடம் அதிகம் காணப்படும் நிலையில், அதன் பக்க விளைவுகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
பாராசிட்டமாலை எடுத்து கொள்வது மிக பாதுகாப்பானது என்ற எண்ணம் மக்களிடம் அதிகம் காணப்படும் நிலையில், அதன் பக்க விளைவுகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம், காரணமாக நம்மில் பலர் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாம் அலையில் குறைவான உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலானோர், மருத்துவமனை சென்று அனுமதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வீட்டில் இருந்தபடியே சரி செய்ய முயற்சிக்கின்றனர். அவற்றில் முதன்மையானது பாராசிட்டமால், எடுத்துக்கொள்வது. எனவே, அதன் விற்பனை சூடு பிடித்துள்ளதாக மருந்து விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாராசிட்டமால் ஒரு பிரபலமான வலி நிவாரணி என்பதோடு, காய்ச்சல், உடல் வலி ஏற்படும் போதும் எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. பாராசிட்டமாலை மிக பாதுகாப்பான மருந்தாக கருதும் போக்கு மக்களிடம் அதிகம் காணப்படும் நிலையில், அதன் பக்க விளைவுகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
மருத்துவர் ஆலோசனையின் படி அளவோடு எடுத்துக் கொண்டால் பாதிப்பு இருக்காது. ஆனால், அதனை மிக அதிக அளவில் தினமும் பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று முன்னதாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வெளியாகியுள்ளது. இதனை தினசரி எடுத்துக் கொள்வதால், இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளும்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எடின்பர்க் பல்கலைக்கழக வல்லுநர்கள் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை கொண்ட 110 நோயாளிகள் ஆய்வில் சேர்க்கப்பட்டனர். நோயாளிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு, நாள் ஒன்றுக்கு நான்கு முறை பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்பட்டன. நான்கு நாட்களுக்குப் பிறகு பரிசோதித்த போது, இந்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் கணிசமாக அதிகரித்துள்ளது தெரிய வந்தது. உயர் இரத்த அழுத்தம் காரணமாக, இந்த நோயாளிகளுக்கு மாரடைப்புக்கான வாய்ப்பு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தில் 10 பேரில் ஒருவர் நாள்பட்ட வலிக்கு தினசரி பாராசிட்டமால் எடுத்துக்கொள்கிறார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் உள்ள பெரியவர்களில் மூன்றில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் வெப் இது குறித்து கூறுகையில், பாராசிட்டமால் பாதுகாப்பான மருந்தாக கருதப்பட்டாலும், அதிகப்படியான பயன்பாடு கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார். இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, மாரடைப்பு அபாயம் அதிக உள்ள நோயாளிகள் பாராசிட்டமாலை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. பாராசிட்டமால் மருந்தை தேவையான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்களை வலியுறுத்துவார்.
இது குறித்து NHS லோதியனில் உள்ள மருத்துவ மருந்தியல் மற்றும் சிறுநீரகவியல் ஆலோசகர் முன்னணி ஆய்வாளர் டாக்டர் இயன் மெக்கின்டைர் கூறுகையில், தலைவலி அல்லது காய்ச்சலுக்கு எப்போதாவது பாராசிட்டமால் பயன்படுத்துவது நல்லது. ஆனால் நீண்ட காலதிற்கு நாள்பட்ட வலிக்கு தினமும் வழக்கமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த மருந்தின் அளவு உடலில் அதிகம் சேர்வதால், மரணம் கூட சம்பவிக்கலாம் என எச்சரிக்கிறார்.

பாராசிட்டமால் உட்கொள்வதை நிறுத்தியபோது, பாதிக்கப்பட்டவர்களின், இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது என்பதும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே, பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு அதன் அபாயங்கள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து தெரிவிக்க வேண்டியது அவசியம்.
