இந்தியாவுக்கு ஹைடெக் போர் ஆயுதங்களை சப்ளை செய்ய தயாராக இருந்தார் எல்.டி.டி.இ. பிரபாகரன்: சீமான் கிளப்பும் புதிய புயல்

சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் வழுக்கு மரத்தில் மீண்டும் மீண்டும் ஏறி வெற்றிப் பழத்தை பறிக்க முயற்சிக்கிறார். ஆனால் இதோ இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வரை அவர் வழுக்கித்தான் விழுந்திருக்கிறாரே தவிர வெற்றியடையவில்லை. ஆனாலும் அடுத்த முயற்சிக்கு தயாராகிவிட்ட அவரை பாராட்டலாம். 
இருக்கட்டும்!

சீமானை மிக சிறப்பாக ’வெச்சு செய்வதையே’ முழு நேர பணியாக சில கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. அதேபோல சீமானும், அவர்களை வகுந்தெடுத்து விமர்சனம் செய்வதையே தனது முழு அரசியல் பணியாக வைத்திருக்கிறார். சீமானுக்கு எதிரான விமர்சனங்களில் மிக முக்கியமான ஒன்று ‘ஈழத்துக்கு சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்ததாக பச்சைப் பொய் சொல்கிறார் சீமான்!’ என்பதே. 

ஆனால் இதை அடியோடு மறுக்கும் சீமான், பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழ் ஒன்றில் தான் எழுதி வரும் தொடரில் சமீப சில வாரங்களாக ஈழம் சென்று தான் பிரபாகரனை சந்தித்ததையும், அவருடன் உணவு உண்டபடியே ஆலோசித்ததையும் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில்தான் இந்த எபிஸோடில் ’இந்தியாவுக்கு மிக நவீனமான போர் ஆயுதங்களை வழங்க தயாராக இருந்தார் மேதகு பிரபாகரன்’ எனும் ஒரு செய்தி வெடியை திரிகிள்ளிப் போட்டிருக்கிறார். அது  பயங்கர விமர்சனங்களுடன் வெடித்துக் கொண்டிருக்கிறது. 
ராஜீவ்காந்தி அனுப்பிய ‘அமைதிப்படை’ ஈழம் சென்று அமைதியை நிலைநாட்டுவதை விட்டு, சிங்கள படையுடன் சேர்ந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர்தொடுத்ததோடு, தமிழர்களையும் ஒடுக்கியது! என்றும், இதனாலேயே அமைதிப்படை மீது கடும் தாக்குதல் நடத்தியதோடு, ராஜீவ் மீதும் கடும் கோபம் கொண்டிருந்தனர் புலிகள்! என்று வலுவான தகவல் உண்டு. சூழல் இப்படியிருக்க, சீமான் எப்படி இந்த மாதிரி சொல்கிறார்? என்று சந்தேகம் எழலாம். ஆனால் இதுபற்றி விளக்கும் சீமான்....

”மேதகு பிரபாகரனுடன் பேசிக் கொண்டிருக்கையில், ‘மறுபடியும் ஏன் நாம இந்தியாவிடம் ஆயுதம் வாங்கக்கூடாது?’ என்று கேட்டேன். அதற்கு அண்ணன் ‘இந்தியப்படை என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறது என தெரிந்தவுடன், சரண் அடைவதை விட சண்டையிட்டுச் சாவது மேல் என நான் முடிவெடுத்துவிட்டேன். குறைந்தளவு படையாக இருந்தாலும் சண்டை தீவிரமானது. 

இரண்டு சுற்று அவர்கள் சுடுவார்கள். பின்னர் நாங்கள் சுடுவோம். பிறகு அவர்கள் அமைதியாகிவிடுவார்கள். பிறகு நம்ம ஆட்கள் தேடிப்போய் பார்க்கையில், துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு முயல் போல் இந்திய ராணுவத்தினர் படுத்திருப்பார்கள். எனக்கு அது குறித்து தகவல் வரும். உடனே ‘ஆயுதத்தை எடுத்துக் கொண்டு, ஆட்களை விரட்டி விடுங்க’ என்று சொல்லுவேன். அந்த ஆயுதங்களை நம் ஆட்கள் மொத்தமாக குவித்து வைத்திருந்தார்கள். 

ஒரு நாள் நான் அந்த இந்திய ஆயுதங்களை எடுத்து இயக்கிப் பார்த்தால், அவை சரியாக இயங்கவில்லை. சொந்த நாட்டு ராணுவத்துக்கே இப்படி மோசமான ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பிய இந்தியாவிடம் நாம போய் எப்படிப்பா ஆயுதங்களை வாங்க முடியும்?’ எனக் கேட்டார். 
நான் தலை கவிழ்ந்திருந்தேன். சட்டென என்னை சரியாக்க ‘உலகளவில் மிக நவீனமான ஆயுதங்களை நாம இப்போ வெச்சிருக்கோம். நீங்க வேணும்னா கேளுங்க, நாம இந்தியாவுக்கு ஆயுதங்களைக் கொடுப்போம்.’ என்றார். நடு நெற்றியில் யாரோ சுடுவது போலிருந்தது எனக்கு.” என்று குறிப்பிட்டுள்ளார். என்ன தில்லான ஒரு தலைவன் பிரபாகரன்!

-    விஷ்ணுப்ரியா