வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு எதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை இந்தப் பதில் காணலாம்.

"ஏதாவது நல்லது நடக்கும். இப்பொழுது நல்லது நடந்து கொண்டிருக்கிறது என்று நம்புவதை தேர்ந்தெடுங்கள். உங்களது தேர்ந்தெடுக்கும் திறன் தான் உங்கள் மாபெரும் சக்தி. மகிழ்ச்சியையும், செழிப்பையும் தேர்ந்தெடுங்கள்" இந்த வார்த்தைகளை சொன்னவர் ஜோஸப் மர்ஃபி. இந்த வார்த்தைகள் சத்தியமான உண்மை. நாம் எதை நினைக்கிறோமோ அதை தான் ஈர்க்கிறோம். நம்முடைய எண்ணங்கள் தான் அனைத்தையும் ஈர்க்கின்றன.

நல்ல விஷயங்களின் மீது கவனம் செலுத்தும்போது நல்ல விஷயங்களை தான் ஈர்ப்போம். பிரச்சனைகள் கீது கவனம் செலுத்தாமல் அதன் தீர்வுகளின் மீது கவனம் செலுத்த வேண்டும். நிகழ்காலத்தை ஏற்றுக் கொண்டு அதை மாற்றியமைக்க முயல வேண்டுமே தவிர, அதிலிருந்து தப்பிக்க நினைக்கக் கூடாது. மகிழ்ச்சி என்பது ஏற்றுக் கொள்ளுதலில் இருந்தே வருகிறது.

உண்மையில் மகிழ்ச்சி என்பதே ஒரு மாயை தான். அதனால் தான் இது இருந்தால் தான் மகிழ்ச்சி அது இருந்தால் தான் மகிழ்ச்சி என எதன் பின்னாலோ ஓடிக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை அவை கிடைத்தாலும் மீண்டும் வேறொன்றின் பின் ஓடத் தொடங்கிவிடுவோம். பின் எப்போதுதான் மகிழ்ச்சியாக இருப்பது? அதற்கான பதிலை இந்தப் பதிவில் காணலாம்.

இன்று எதேச்சையாக யூடியூப்பில் கற்க கசடற என்ற சேனலில் ஒரு வீடியோ காண நேர்ந்தது. அந்த வீடியோ மகிழ்ச்சியாக இருப்பது பற்றியது. ஜெர்மனியில் செய்த ஓர் ஆய்வில் மாணவர்களிடம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என கேட்கப்பட்டது. அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்கள். மீண்டும் ஒரு கேள்வியாக, நீங்கள் கடந்த ஓர் ஆண்டில் எத்தனை பேரை டேட் (date) செய்தீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு அதற்கெல்லாம் நேரமில்லை; படிக்கவே நேரம் சரியாக இருந்ததாக சாதாரணமாக சொன்னார்கள்.

மேலே கேட்கப்பட்ட இந்த இரண்டு கேள்விகளையும் மாற்றி கேட்கும்போது வேறுவிதமான பதில்கள் வந்தன. முதலாவதாக நீங்கள் கடந்த ஓர் ஆண்டில் எத்தனை பேரை டேட் (date) செய்தீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'டேட்லாம் பண்ணலங்க. படிக்கவே நேரம் சரியா இருக்கு'என விரக்தியாக பதிலளித்தனர். அவர்களிடம் மீண்டும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு, 'டேட் கூட பண்ணமுடில' என்றே பதில் வந்தது. இந்த இரு குழுக்களிடமும் பேசியதன் அடிப்படையில் பார்க்கும்போது மக்களின் எண்ணங்கள் பற்றி நம்மால் தெரிந்து கொள்ளமுடியும். அதாவது நம்மிடம் இருக்கும் விஷயங்கள் குறித்து யோசிக்காமல் இல்லாத விஷயங்கள் குறித்து சிந்திக்கும்போது மகிழ்ச்சியை இழக்கிறோம்.

நாம் சந்தோஷமாக இருப்பது பெரிய சூத்திரம் ஒன்றும் கிடையாது. ஆனால் நம்மிடம் இருக்கும் விஷயங்களை விட்டுவிட்டு இல்லாத விஷயங்களை யோசிக்கும்போது கண்டிப்பாக நாம் சந்தோஷமாக இருக்கிறோம் என்பதை நம்பவேமாட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.

மகிழ்ச்சிக்கான சீக்ரெட்

உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க தனிக்காரணங்கள் ஒன்றும் கிடையாது. நம்மிடம் இருப்பவை தான் நமக்கு தேவையானவை என்பதை நாம் நம்பினாலே போதும். இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தும்போது இருக்கும் விஷயங்களை மறக்கிறோம். அதனால் இருக்கும் விஷயங்களால் திருப்தி அடைய வேண்டும். அதை கொண்டாடத் தெரிந்தாலே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். மகிழ்ச்சியாக இருக்க பெரிய காரணங்கள் தேவையில்லை. எந்த நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே போதுமானது. இதுதான் அந்த சீக்ரெட்.