40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடைபெறும் மிக அரிய நிகழ்வான அத்திவரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி இன்று வரை சயன கோலத்தில் காட்சி அளிக்க உள்ளார் அத்திவரதர். இந்நிலையில் நாளை முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சயன கோலத்தில் அத்திவரதரை காணவே தினமும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூட்ட நெரிசலையும் பார்க்காமல் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதில் பலர் மயக்கம் அடைந்தனர். ஒரு சிலர் உயிரிழந்தனர். இருந்தபோதிலும் கூட்ட நெரிசலையும் கட்டுப்படுத்தாமல் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய மிக முக்கிய நிகழ்வு இது என்பதால் பக்தர்கள் அதிக ஆர்வத்துடன் காஞ்சிபுரத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் போலீசார் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் காவலர்கள் என அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் இல்லாததால்  பாலாறு மற்றும் செய்யாறு படுகைகளில் மணல் கொள்ளையர்கள் அவர்களது கைவரிசை காண்பிக்க தொடங்கியுள்ளனர்.

அதன்படி உத்திரமேரூர் ஒன்றியத்தில் பெருநகர் மற்றும் சாலவாக்கம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் மிகவும் அதிகமாக நடக்கிறது. குடிநீர் கிணறுகள் உள்ள இடங்களிலும் மணல் அதிகமாக எடுத்து செல்வதால், அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. அத்தி வரதர் விழாவை பயன்படுத்தி மணல் கொள்ளையர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஏகப்பட்ட பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். இவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூட காவலர்களுக்கு நேரம் இல்லாத அளவிற்கு அத்திவரதர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை பயனப்டுத்தி மணல் கொள்ளையர்கள் படு ஜோராக சம்பாதிக்கின்றனர்.