ஆடிய ஆட்டத்தை அடக்கிய போலீசார்..! ரூட்  தல பசங்க "பேச்சு மூச்சு இல்லாம" பேருந்தில் பயணம்..! 

இதுநாள் வரை ஆட்டம் பாட்டம் என ஒரே சப்தம் போட்டு பேருந்தில் பயணம் மேற்கொண்டு வந்த சென்னையின் நான்கு கல்லூரி மாணவர்கள் நேற்று பேச்சு மூச்சு இல்லாமல் அமைதியாக பேருந்தில் பயணம் செய்து உள்ள காட்சியைப் பார்த்து பொதுமக்களே வாயடைத்து போய் உள்ளனர்.

கடந்த 23ஆம் தேதியன்று பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் ரூட் தல விஷயத்தில் மோதிக் கொண்டனர். இந்தப் பிரச்சினையில்  ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். இந்த காட்சி சமூகவலைதளத்தில் வெகுவாகப் பரவியது. மேலும் மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கையும் வலுத்து வந்தது. 

பின்னர் இந்த பிரச்சினைக்கு தொடர்பான 58 மாணவர்களை கண்டுபிடித்து அவர்களிடம், இனிமேல் இதுபோன்று நடந்து கொள்ள மாட்டோம் என பிரமாண பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர் போலீசார். அது மட்டுமல்லாமல் மீண்டும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் கண்டிப்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர அவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர மாணவர்களை தீவிரமாக கண்காணிக்கவும், அவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது  அவர்களின் நடவடிக்கையை கண்காணிக்கவும் ஒரு தனி குழுவே அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் மாணவர்களின் பயணங்கள் குறித்த ஒரு அறிக்கையும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன் காரணமாக நேற்று பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, பொது கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக பயணம் செய்து உள்ளனர், இதற்கு முன்னதாக பாட்டுப் பாடிக் கொண்டும் தாளமிட்டு கோஷம் போட்டுக் கொண்டும் சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர்.

ஆனால் தற்போது போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அமைதியாக பயணம் செய்துள்ள காட்சி பேருந்தில் பயணிப்பவர்களை  வியப்பில் ஆழ்த்தி உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதே நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என பொதுமக்களும் கருத்து தெரிவித்து உள்ளனர். இது தவிர்த்து மீண்டும் பிரச்சினை செய்தால் புகார் அளிக்க 9087552233 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும், சென்னை சிட்டி போலீஸ் என்ற ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.