நம் வாழ்நாளில் அத்தி வரதரை ஒருமுறை தரிசித்தாலே புண்ணியம் கோடி செய்ததற்கு சமம் என சொல்லலாம். ஆனால் ஒரு சிலரே அத்திவரதரை அவர்களது வாழ்நாளில் இரண்டு முறை தரிசனம் செய்யக் கூடிய வாய்ப்பையும் பெற்று இருப்பார்கள்.

காரணம்... 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் கொண்டாடப்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் அத்திவரதரை காண படையெடுத்து வருவார்கள். 48 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தை பார்ப்பதற்காக நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும்.

இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரத்தை சேர்ந்த வரதாச்சார் பட்டர் என்பவர் மூன்றாவது முறையாக அத்திவரதரை தரிசனம் செய்யும் அற்புத அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 1939 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் தரிசனம் செய்தார் இவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவருக்கு வயது தற்போது 92. சிறந்த ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது என் வாழ்நாளில் அத்திவரதரை ஏற்கனவே இரண்டு முறை தரிசனம் செய்து விட்டேன்.. தற்போது மூன்றாவது முறையாக தரிசனம் செய்வதை நினைத்து பார்க்கும் போது மிகவும் மன மகிழ்ச்சி அடைந்துள்ளேன். மூன்றாவது முறையாக தரிசனம் செய்வது என்பது மில்லியன் முறை தரிசனம் செய்வதற்கு சமமானது...இதற்காக அத்தி வரதருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பெருமையாக தெரிவித்துள்ளார்.