Republic Day 2023: குடியரசு தின விழா பிரமாண்ட அணிவகுப்பை நேரில் காண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?
Republic Day 2023: குடியரசு தின விழா அன்று பிரமாண்ட அணிவகுப்பை நேரில் காண, ஆமாந்த்ரன் இணையதளத்தில் டிக்கெட்டுகள் பதிவு செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு காணலாம்.
74வது குடியரசு தினத்தை இந்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி அன்று இந்தியா அனுசரிக்கிறது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நம் தேசத்திற்கு குடியரசு அங்கீகாரம் கிடைத்தது. இந்த நாளில் தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில், குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும். இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் தேசிய கொடியை ஏற்றவுள்ளார். சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல் சிஸி அழைக்கப்பட்டுள்ளார். இந்தத் தினத்தின் கருவாக 'பெண் சக்தி' அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் முப்படைகளின் கம்பீரமான அணிவகுப்பு, கண்களை கவரும் கலை நிகழ்ச்சிகள், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வரும் அலங்கார ஊர்திகள் உலா ஆகியவை நடைபெறும். இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசிக்க படையெடுப்பார்கள். நேரில் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாகவும் இந்த நிகழ்வை மக்கள் பார்த்து களிப்படைவார்கள்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பாகும். அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://indianrdc.mod.gov.in/ இல் இலவசமாக அணிவகுப்பை கண்டு ரசிக்கலாம். ஆனாலும் நேரில் கண்ட உணர்வு கிடைக்காது என நினைப்பவர்களுக்காக ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட விஸ்டா மார்க்கத்தில் நடைபெற இருக்கிறது. இதை நேரில் காண விரும்பும் மக்களுக்காக 32 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த டிக்கெட்டுகளை www.aamantran.mod.gov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம். ஆமாந்த்ரன் தளத்தில் டிக்கெட்டுகள் பதிவு செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு காணலாம்.
இதையும் படிங்க: டயட் இருக்காமலே தொப்பை குறையும்... தினமும் ஸ்கிப்பிங் மட்டும் பண்ணா போதும்..
ஆன்லைன் புக்கிங்
ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகள் பதிவு செய்யலாம். நிகழ்வு, டிக்கெட் வகையின் அடிப்படையில் டிக்கெட் விலை ரூ.20 முதல் ரூ.500 வரை இருக்கும். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்களுக்கு உத்யோக் பவன், மத்திய செயலகத்திற்கு இலவச மெட்ரோ பயணம் செய்யும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு 2023: ஆன்லைன் புக்கிங்...
- முதலாவதாக www.aamantran.mod.gov.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக கேப்சா குறியீட்டை பதிந்து கொள்ளுங்கள்.
- கணவரின் பெயர் அல்லது தந்தையின் பெயர், பிறந்த தேதி, நிரந்தர முகவரி ஆகிய தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு OTP வரும்.
- நீங்கள் பங்கேற்க விரும்பும் நிகழ்வைத் தேர்வு செய்யவும். அதன் பின்னர் டிக்கெட்டுகளின் வகை, கிடைக்கும் தன்மை, விலைகள், அதற்கான இணைப்புகளை காண்பிக்கும். அதை தேர்வு செய்யுங்கள்.
- ஒரு மொபைல் எண்ணில் 10 டிக்கெட்டுகளை ஒரு நபர் முன்பதிவு செய்யலாம். அடையாளச் சான்றுக்கு ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை ஆகியவை பயன்படுத்தலாம். பதிவேற்றப்படும் படம் .png அல்லது .jpg வடிவத்தில் இருக்க வேண்டும். அதன் அளவு 1 MBக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- அனைத்தையும் தேர்வு செய்த பிறகு கட்டணம் செலுத்தினால் போதுமானது. உங்களுடைய டிக்கெட்டுகளில் அணிவகுப்பு நடைபெறும், உங்களுக்கான இடம் குறித்த தனித்துவமான QR குறியீடு இருக்கும்.
நேரடி டிக்கெட் கவுண்டர்கள்
- பிரகதி மைதானம் (கேட் நம்பர்1)
- சேனா பவன் (கேட் நம்பர் 2)
- சாஸ்திரி பவன் (கேட் நம்பர் 3)
- ஜந்தர் மந்தர் (பிரதான கேட் அருகில்)
- பாராளுமன்ற மாளிகை (வரவேற்பு அலுவலகம்)
மேற்குறிப்பிட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் வரை அனுமதி சீட்டுகளை பெறலாம்.
இதையும் படிங்க: Date Benefits: பல நோய்களுக்கு ஒரே தீர்வு.. பேரிச்சம்பழத்தில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ நன்மைகள்!