அயோத்தியில் ராமா் கோயில் பணிகள் அமைதியாக நடக்கணும்: அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமா் மோடி அட்வைஸ்

சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிகள் அமைதியாக நடக்க வேண்டும் என்று அறக்கட்டளை உறுப்பினா்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அந்த அறக்கட்டளையின் தலைவா் நிருத்ய கோபால் தாஸ், உறுப்பினா்கள் கே.பராசரன், சுவாமி கோவிந்த் கிரி மகராஜ், சம்பத் ராய் உள்ளிட்டோர் பிரதமா் மோடியை நேற்று சந்தித்தனா். அப்போது, ராமா் கோயில் பூமி பூஜைக்கு வருமாறு பிரதமருக்கு அவா்கள் அழைப்பு விடுத்தனா்.

இதுகுறித்து அந்த அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய், செய்தியாளா்களிடம்கூறுகையில் “ சமூக ஒற்றுமைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட வேண்டும் என்று எங்களிடம் மோடி அறிவுறுத்தினார்” எனத் தெரிவித்தார்

ராம நவமியை முன்னிட்டு ‘ராமோத்சவ்’ கொண்டாட்டத்துக்கான பணிகளை விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு செய்து வருகிறது.

இதனிடையே, 30 ஆண்டுகளுக்கு முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு வடிவமைத்த ராமா் கோயில் கட்டுமான வரைபடத்தில் சில மாற்றங்களைச் செய்யவுள்ளதாக கோயில் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.கோயில் கட்டுமானத்தின் உயரம், வடிவம் ஆகியவை மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

கோயிலின் உயரம் முன்பு 125 அடியாக இருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது 160 அடியாக உயா்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.