"உள்ளே பேசியதை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது"..!  நடிகர் ரஜினிகாந்த் அதிரடி..! 

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஓராண்டுக்கு பிறகு இன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கட்சி தொடங்குவது குறித்து ஓராண்டுக்கு பின் தற்போது ஆலோசனை செய்து உள்ளோம். நிர்வாகிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். அவருடைய சந்தேகங்களை கேட்டு அறிந்தனர். இந்த ஆலோசனைக்கு பின் அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அது என்ன என்பது நேரம் வரும்போது சொல்கிறேன்.

நிர்வாகிகள் எதிர்பார்ப்பது... அன்பு, அமைதி, சகோதரத்துவம் மட்டுமே. தற்போது நாட்டில் நிலவக்கூடிய பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண என்னால் முடிந்த அளவுக்கு நிற்பேன். குறிப்பாக சிஏஏ வுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்திற்கு ஒரு வழி பிறக்க மதகுருமார்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய தயாராக இருக்கிறேன். இதற்கு ஒரு தீர்வு காண அவர்களும் உடன் படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் வெற்றிடம் நிரப்பப்பட்டதா என்ற கேள்விக்கும் கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கும் "அது நேரம் வரும்போது தான் தெரியும்" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின் தனிப்பட்ட முறையில் ஒரு ஏமாற்றம் உள்ளது என குறிப்பிட்டீர்கள். அது என்ன என்ற கேள்விக்கு, "உள்ளே பேசினது எல்லாம் வெளியே சொல்ல முடியாது" என அதிரடியாக தெரிவித்து வீட்டிற்குள் நுழைந்தார் நடிகர் ரஜினி.