ஆன்மீக அரசியல் எல்லாம் அவ்வளவு தானா.... குமுறும் ரஜினி ரசிகர்கள்...! 

கடந்த வாரம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், தன் அரசியல் நிலைப்பாடு குறித்தும் இன்று சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் பேசினார். பேட்டி பரபரப்பாக இருந்தாலும், மக்களும், ரசிகர்களும் எதிர்பார்த்த கட்சி அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடவில்லை. 

அதற்கு மாறாக தெளிந்திருந்த குட்டையை குழப்பிவிட்டு போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஜெயலலிதா மறைவின் போது அமைதி காத்து வந்த ரஜினி, திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தான் தனது அரசியல் பயணத்திற்கு பாதை வகுக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் தான் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகிவிட்டது, சிஸ்டம் சரியில்லை என தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகளையும் கிழி,கிழியென கிழித்து தொங்கவிட்டார். 

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கூட, இரு பெரும் தலைவர்கள் இல்லை, அவர்களது வெற்றிடத்தை நிரப்பவே நான் வந்திருக்கிறேன் என ஒரே போடு போட்டார். இதை கேட்ட ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்த சமயத்தில் அடுத்த வெடி குண்டை போட்டு, அவர்களை மொத்தமாக ஆஃப் செய்துவிட்டார்.

ஆம், அரசியல் கட்சி ஆரம்பிப்பேன், ஆனால் நான் முதலமைச்சர் கிடையாது. முதலில் என்னை வருங்கால முதல்வர் என்று அழைப்பதை நிறுத்துங்கள் என்று அதிரடி காட்டினர். அடுத்ததாக அரசியலுக்கு வாங்க, வாங்கன்னு கூப்பிட்டிங்க... இப்ப வந்துட்டேன்... இனி மக்கள் எல்லாரும் சேர்ந்து எழுச்சி செய்யனும். அப்போ தான் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறி தெளிவாக குழப்பினார். இதையெல்லாம் கேட்ட ரஜினி ரசிகர்களோ, என்ன தலைவரே ஆன்மீக அரசியல்ன்னு சொன்னது எல்லாம் சும்மாவா?? என தங்களையே நொந்துகொள்கின்றனர்.