தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக கோவை, ஈரோடு, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, நாமக்கல், தேனி, கரூர், நெல்லை, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் கோடை வெயில் ஒருபக்கம் இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்து அறநிலையத்துறை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு கோவில்களில் யாகம் நடத்துமாறு உத்தரவு பிறப்பித்தது. 

அதன்படி பல கோவில்களில் யாகம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் திருவண்ணாமலையில் வருண யாகம் நடத்தப்பட்ட பின்னர் உடனடியாக அப்பகுதியில் நல்ல மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.யாகத்திற்கு கிடைத்த பலன் என்று பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபக்கமிருக்க சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்று அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வீரகனூர் மற்றும் கங்கவல்லியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் என்ற இடங்களில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.