தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குமரி கடலில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுவதால் தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் வெப்ப நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் குறிப்பாக திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், திருச்சி, நாமக்கல், கரூர், வேலூர் ,மதுரை, திண்டுக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரையில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மற்ற நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.