குமரி கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், தென் மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. வரும், 15ம் தேதி வரை மழை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி கடல் பகுதியில், 2 கி.மீ., உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ‘’மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், ஓரிரு இடங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யலாம். தென் மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், 14, 15ம் தேதிகளில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், கனமழையும் பெய்யும். சென்னையில் அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்’’ என அவர் தெரிவித்தார்.