சென்னையை  தவிர மற்ற இடங்களில் மழையோ மழை..! 

தொடர்ந்து வாட்டி வதைத்து வரும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது

இம் மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி வெயில் வரும் 29ஆம் தேதி வரை உள்ளதால் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அனல் காற்று மற்றும் அதிக வெப்ப நிலை நிலவி வருகிறது.இதற்கிடையில் ஃபானி புயலால் தமிழகத்திற்கு ஓரளவுக்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திசை திரும்பி ஒடிசாவில் கரையை கடந்தது, இது தமிழகத்திற்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இருந்தாலும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் கோவில்களில் யாகம் நடத்த வேண்டும் என இந்து அறநிலையதுறை அறிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி சமீபத்தில் வருண யாகம் திருவண்ணாமலை கோவிலில் நடத்தப்பட்ட பின், உடனடியாக மழை பெய்து தீர்த்தது. இது யாகத்திற்கு கிடைத்த பலன் என பக்தர்கள் பலர் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இது ஒரு பக்கமிருக்க தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் மழை காரணமாக பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர் அரக்கோணம் மற்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்