பொது இடத்தில் முத்தம், கொஞ்சல், ரொமான்ஸ் என்பது முறையானது அல்ல. அதற்கென்றே இடங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், பீச்சுகளில் ரொமான்ஸ் தேவையா?

உணவு விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். உங்கள் கையில் காசு இருக்கிறது. பிட்சா, பிரியாணி என எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதை ஹோட்டலுக்குள்ளோ வீட்டிலோ சாப்பிடலாம். பிட்சா, பிரியாணியை வாழ்க்கையில் கணடிராத - அதற்கு ஏங்கிக் கிடக்கும் மக்கள் முன் அதைச் சாப்பிட்டு வெறுப்பேற்றுவதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது? அதே அளவு தவறுதான் தனிமையில் வாழ்வோர் புழங்க வாய்ப்புள்ள இடங்களில் ரொமான்ஸ் செய்வதும். அவர்கள் பார்த்து கண்ணைக் கசக்கிக்கொண்டு மட்டுமல்ல, சாபம் விட்டுச் செல்லவும் வாய்ப்பு உண்டு.

என் தங்கம் என் உரிமை என்பது போல, என் காதலி என் ஆசை என ரொமான்ஸ் செய்தால் பாத்ரூம்குள்ளே கேமரா வைத்து பதிவு செய்பவர்கள் சாலையில் விட்டுவிடுவார்களா என்ன? பிறகென்ன சாலையில் இருந்தவர் பார்த்து போக இணையதளத்திலும் பரவி உங்களுக்கே ஃபார்வேர்டாகி வரும். ரொமான்ஸ் செய்பவர்கள் யார் கவனத்தில் வேண்டுமானாலும் சிக்கலாம். பக்கத்துவீட்டுக்காரராக இருக்கலாம். உறவினரின் நண்பராக இருக்கலாம். சில நேரங்களில் பெற்றோராகவே இருக்கலாம்.

இது தொடர்புடையவருக்கு மட்டும் பாதிப்பு இல்லை. வளர்ப்பு சரியில்லை என பெற்றோருக்கும் கெட்டபெயர்.  கருத்து வேறுபாடுகளால் காதல் முறிந்து வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறும் நிலை வந்தால் தெருவில் அழைத்துச் செல்லும் போது ஏற்கனவே வேறு ஒருவரோடு சுற்றிக் கொண்டிருந்த நிலையில் இது புது கேசா என பேசப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.