poem indicates people life in chennai rain

மழைக் காலம் வந்துவிட்டாலே பலருக்கும் கவிதைகள் தானாய் ஊற்றெடுக்கும். அது இந்த மழைக்காலத்துக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? இதோ நெட்டிசன்கள் தொட்டுத் தொடர்ந்த கவிதைகள் இவை...

சாதாரணமாகவே மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கவிதைகள் அமைவதுண்டு. இங்கே நம் நெட்டிசன்கள் இப்படி கவிதைகளாகக் கொட்டி வருகின்றனர். மழை பெய்து வெள்ளம் பெருகி சிரமத்தைக் கூட்டினாலும், அதையும் ரசித்து கவிதையாய் வரைந்து தள்ளும் மனசு நம் மக்களுக்கு...

இரு வேறு யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் இரு கவிதைகள்... இதோ...

தொடங்கும் போது
காதலியைப் போல்
மகிழ்ச்சியாய் தெரிந்த மழை ...

தொடர்ந்து கொண்டே இருப்பதால் 
மனைவியைப் போல்
தொல்லையாய்த் தெரிகிறது...

இன்னும் நீடித்தால்
மருமகளைப் போல் வீட்டுக்குள் புகுந்து
நம்மை வெளியேற்றி விடுமோ
என்றே தோன்றுகிறது...

***

மழை பெய்து 
வீட்டுக்குள் வெள்ளம் வந்து 
பொருளை நாசம் செய்து விட்டதே என 
அதனைத் திட்டாதீர்கள்... 
திருடப் பட்ட 
தன் ஒரே புகலிடமான 
ஏரிகளையும், குளங்களையும் 
பரிதாபமாகத் தேடி அலைகிறது 
மழை நீர்.

தான் தஞ்சம் பெறும் புகலிடத்தை ஆக்கிரமித்து 
தன் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டதால் 
ஏற்பட்ட கோபத்தில் 
அந்த மழை நீர் 
சாலையில் இறங்கி 
மறியலில் ஈடுபடுகிறது...

எனவே... திட்டாதீர்கள்... மழை நீரை!

கேட்பதற்குக் கவிதை போல் இருந்தாலும், 
நெஞ்சம் சுடும் நிஜத்தைச் 
சொல்லிக் கொண்டிருக்கும் காட்சி.

#சென்னை_மழை