நாடு முழுவதும் இன்று  ஹோலி பண்டிகை சீரும் சிறப்புமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியர்களின் பாரம்பரிய வண்ணம் பூசும் விழா அதாவது ஹோலி பண்டிகையான இன்று, கலர் கலராக பவுடர்களை பூசி நெருங்கிய சொந்தங்கள் முதல் நண்பர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர் 

வட இந்தியர்கள் வசிக்கும் அனைத்து இடங்களிலும் இன்றைய தினம் வண்ணம் பூசும் விழாவான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த சிறுவன் ஒருவன் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடி உள்ளான்

அப்போது, இந்த விழாவினை போட்டோ எடுத்துக்கொண்டிருந்த சக போட்டோகிராபர்களில் ஒருவரான ரவி என்பவர், அந்த சிறுவனை மீட்டு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றினார். CPR செய்து, உடலில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, இதய துடிப்பை சீராக்கினார். ஒரு போட்டோ கிராபர் செய்த முதலுதவியால் இன்று அந்த  சிறுவன் உயிர் பிழைத்து இருக்கிறான்.

இந்த சம்பவத்தால் ஹோலி பண்டிகை மகிழ்வில் இருந்தவர்கள் சிறிது நேரம் துக்கம் அடைந்தாலும் , சிறுவனின் உயிர் காப்பாற்றப் பட்ட பின்னர் தான் அவர்கள் முகம் மீண்டும் மலர்ந்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்திற்கு பிறகு, அவருக்கு பாராட்டுக்கள்  குவிந்த வண்ணம் உள்ளது. ஒரு விபத்து நடக்கும் போது, அவர்கள் காப்பாற்றுவதை விட்டுவிட்டு போட்டோ எடுக்கிறார் வீடியோ எடுக்கிறார் என்ற குற்றசாட்டு பல முறை சமூக வலைத்தளத்தில் எழும். ஆனால், இன்று  உயிரை காப்பாற்ற போட்டோகிராபர் செய்த உதவி யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. போட்டோகிராபர் ரவியின் செயலுக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.