சீனாவில் கொரோனா வைரஸ் எதிரொலி...! தொடர்ந்து அதிகரிக்கும்  உயிர் பலி..! 

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ்

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கு பரவியது. 

பாம்புகளில் இருந்து கொரோனா வைரஸ்

உலகையே மிரட்டத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலமா என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் இறைச்சியை தவிர்க்குமாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸின் அறிகுறிகள்

மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிற, மேல் சுவாச நோய்த்தொற்றுகளை போலவே, கொரானா அறிகுறியும் ஒத்திருக்கின்றன, எனவே வைரஸை அடையாளம் காண்பது சற்று கடினமாகிறது. இருமல் மற்றும் சளி போன்ற வழக்கமான அறிகுறியாக இருந்தாலும், காய்ச்சல் நீடித்தால் தாமதிக்காதீர். நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை அடையாளம் காண உடனடியாக ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

56 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் காய்ச்சலால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் 1,975 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்நாட்டு சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வுஹான் நகரில் உள்ளவர்கள் நகரிலிருந்து வெளியேறவும் புதியவர்கள் வெளியிலிருந்தும் நகருக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1000 படுக்கைகளும் ஒரே வாரத்தில் மருத்துவமனை

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சீனாவின் வுகான் நகரில் புதிதாக ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனையை சீன அரசு ஒரே வாரத்தில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மருத்துவமனை 25000 ச.மீ பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது.

போக்குவரத்து தடை

இந்த வைரஸ் நுரையீரலை தாக்கி நிமோனியை காய்ச்சலை ஏற்படுத்தும். இது வேகமாக பரவுவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
களையிழந்த வசந்த கால திருவிழா

சீனாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் வசந்த கால திருவிழா, இந்த கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் இருந்து கேரளா வந்த 7 பேர் தீவிர கண்காணிப்பு

சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரு, ஐதராபாத்தில் தலா ஒருவர் என சீனாவில் இருந்து வந்த 11 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சீனாவில் தவிக்கும் தமிழர்கள்

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் சீனாவில் இருக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான உகான் நகரில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். ஓட்டல்கள், ஐ.டி.கம்பெனி, கல்வி நிலையங்கள் என பல்வேறு பணிகளை செய்து வரும் தமிழர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.