ஒரே நொடியில் ஒதுங்கி நின்ற மக்கள்..!

20 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தில் மூன்று நொடியில் ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு மக்கள் வழிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஹாங்காங் தலைவரான கேம் லேம், சீனாவின் ஆதரவைப் பெற்றவர் இவர் குற்றம்சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு  நாடு கடத்தி விசாரிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்து இருந்தார். இதற்கு எதிராக ஹாங்காங்கில் பொதுமக்கள் பெரும் கண்டனக் குரலை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அடுத்தபடியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் ஒன்று கூடி பல்வேறு போராட்ட வாசகங்கள் அடங்கிய பேனரை வைத்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரிய பெரிய கட்டிடங்களில் சுவரொட்டியை வைத்தும் கைகளில் பேனர் ஏந்தியபடியும் கண்டனக்குரல் எழுப்பினர். இந்த போராட்டம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெரிய பேனர் ஒன்றை கட்டிடத்தில் வைக்க முயன்றபோது ஒரு நபர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். காயம்பட்ட அவரை அருகில் இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது இருபது லட்ச மக்களும் அடுத்த சில வினாடிகளில் அவரவர் ஒதுங்கி நின்று வழி விட்டு நின்றனர். இந்த காட்சி காண்போரை வியப்படைய வைத்தது.

அதுமட்டுமல்லாமல் கடந்த புதன்கிழமை அன்றும் இந்தப் போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சில பொருட்கள் அங்கேயே விட்டு சென்றனர். இந்த பொருட்களை மறுநாள் காலை மக்களே ஒன்றுகூடி குப்பைகளை அகற்றினர். இந்த காட்சி உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.