parents should scold the children during their growth

“குழந்தைகளைத் திட்டி வளருங்கள்....! இல்லையெனில்.....

இன்றைய காலக்காட்டத்தில் எதை கேட்டாலும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதும்,கஷ்டம் நஷ்டம் தெரியாமல் குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ப்பதும் தான் பிரச்சனைக்கு காரணமாக உள்ளது

15 முதல் 29 வரையிலானவர்கள் இந்தியாவில்தான் மிக அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.எதைச் சொன்னாலும் இன்றைய இளைய தலைமுறையினரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இதற்கு பெரியவர்கள்தான் முக்கியக் காரணம் என்றார்.

குழந்தைகளைத் திட்டுவதில்லை என்பதை பல பெற்றோர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு.. ஏதேனும் ஒரு காரணத்துக்காகத் திட்டும் போது- திட்டக் கூட வேண்டியதில்லை- முட்டாள்,இப்படியா செய்வது என ஏதேனும் கேளிச் சொல்லைப் பயன்படுத்தினால் கூட பொலபொலவென்று கண்ணீர் வந்துவிடுகிறது இந்த காலத்து குழந்தைகளுக்கு...

அம்மா கடுமையாகத் திட்டுவார். ஆசிரியர் அடிப்பார்.அப்பா எப்பொழுதாவதுதான் அடிப்பார் ஆனால் செமத்தியா அடிப்பார் இப்படி எல்லாம் பேசிக்கொண்ட காலம் சென்றுவிட்டது 

அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி? 

Too sensitive என்றெல்லாம் இருந்ததேயில்லை. உண்மையாக அழுததைக் காட்டிலும் அடி வாங்குவதிலிருந்து தப்பிப்பதற்காக பாவனையாக அழுததுதான் அதிகம்.

இன்றைய குழந்தைகள் அப்படியில்லை. மனிதர்களுடன் உரையாடுவதை விடவும் திரைகளுடன்தான் அதிகம் உரையாடுகிறார்ள். கணினித்திரை, அலைபேசித் திரை, தொலைக்காட்சித்திரை எதுவும் குழந்தைகளுக்கு மனிதர்களின் மனங்களைச் சொல்லித் தருவதில்லை. சக குழந்தைகளுடன் விளையாடுவதும் சண்டையிடுவதும் வெகு அரிது. பள்ளிகளிலும் கண்டிப்புகள் இருப்பதில்லை. 

வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் போது ஒரு முறை அழைத்துப் பார்த்தால் குழந்தைகளின் கவனம் நம் பக்கம் திரும்பவில்லையெனில் ‘டேய்’ என்று சற்றே அதட்டுவதில் தவறொன்றுமில்லை. நமக்கே அது கடினமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கும் அந்த அதட்டலை ஏற்றுக் கொள்வது கடினம்தான். முதல் ஒன்றிரண்டு முறை அழுவார்கள். சுணங்குவார்கள். அது பிரச்சினையில்லை. இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை அவர்களுக்குப் பழகிவிடும். நம்முடைய கோபத்தை நாம் மறைத்துக் கொண்டு குழந்தைகளிடம் எப்பொழுதுமே காட்டாமல் இருந்துவிட்டு நம்மையும் மீறி ஏதேனும் தருணத்தில் கொட்டிவிடும் போது அந்தப் பிஞ்சுகளால் அதனைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள்.

பதின்பருவத்துக் குழந்தைகள்தான் (Teen age) தற்கொலை என்ற உச்சகட்ட முடிவுகளை அதிகம் எடுக்கிறார்கள். அவர்களது வயது அப்படி. தம்மைப் பெரியவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். சென்சிடிவ்வாக வளர்ந்து நிற்கும் அவர்களால் அம்மாவும் அப்பாவும் திட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவசரப்பட்டுவிடுகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே ‘அம்மா திட்டுவாங்க’ ‘அப்பா திட்டுவாங்க’ என்ற மனநிலையை உருவாக்காமல் விட்டுவிடுவது பெற்றோரின் முக்கியமான தவறாக இருக்கிறது.அப்படிக் குழந்தைகளை உருவாக்குவதும் கூட ஒரு வகையிலான அவர்களின் மன அழுத்தம்தான் என்று கூட சொல்லலாம்

இனியாவது குழந்தை வளர்க்கும் போதே, அவர்களை எந்த அளவுக்கு கண்டிப்புடன் வளர்க வேண்டுமோ...அந்த அளவிற்கு கண்டிப்புடன் வளர்த்தால் நல்லது.