வளரும் குழந்தைகளுக்கு கால்வலி வருவது இயல்புதான். ஆனால் அடிக்கடி கால்கள் வலிப்பதாக சொன்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதால் அவர்களுக்கு கை, கால் வலி வருவது இயல்புதான். நடன வகுப்புகள், விளையாட்டு பயிற்சிகள் போன்றவை குழந்தைகளுக்கு கால் வலி தரலாம். குறிப்பாக குழந்தைகள் வளரும் போது இப்படி கால்கள் வலிக்கும். இந்த வலி தைலம் போட்டு மசாஜ் செய்தால், மறுநாளே போய்விடும். சில நாட்கள் இந்த தொந்தரவு இருக்கலாம். ஆனால் இந்த வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் அதை அலட்சியமாக விடக் கூடாது.

குழந்தைகளுக்கு வளர்ச்சி காரணமாக ஏற்படும் வலிகள் தசை வலிகளாக இருக்கும். இந்த வலி எலும்புகளில் ஏற்படாது. கீழ் மூட்டுக்கு கீழே கால்களில் பின்புறம் உள்ள கன்றுகள், தொடை ஆகிய பகுதிகளில் வலிக்கும். அதிகம் விளையாடும் குழந்தைகளுக்கு இப்படி வலி வரும். இந்த வலி இரவு அல்லது மாலை ஏற்படும். மசாஜ் செய்தால் குறையும். ஒரு நாள் அல்லது சில நாட்களில் படிப்படியாக வலி மறையும்.

வெந்நீர் ஒத்தடம், மசாஜ், சத்துள்ள உணவுகள், நீரேற்றமுள்ள ஆகாரங்கள் கொடுக்க வேண்டும். விளையாடும் குழந்தைகளுக்கு வார்ம்-அப்/கூல்-டவுன் பயிற்சிகள் சொல்லித்தரலாம். ஆனால் இப்படி வெறும் வலி ஏற்படாமல் சில அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர் உஷாராக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

அறிகுறிகள்

எடை குறைதல், சோர்வு, பலவீனமான தோற்றம், தொடர்ந்து மூட்டுகளில் வீக்கம், குழந்தை எப்போதும் மந்தமாக எதிலும் ஈடுபடாமல் இருப்பது, ஒரு காலில் மட்டும் வலி, கால்கள் மட்டுமின்றி கைகளிலும் வலி, காயம் அல்லது அறிகுறி இல்லாத அதிர்ச்சி, அண்மையில் வைரஸ் அல்லது அடிக்கடி காய்ச்சல் வந்தால் இரத்த பரிசோதனை, எக்ஸ்-கிரே, எம்ஆர்ஐ ஆகியவை எடுக்க வேண்டியிருக்கும். உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

இந்த பாதிப்பா இருக்குமா?

வெறும் அறிகுறிகளை வைத்து குழந்தைகளின் நோயை நாமே முடிவு செய்ய முடியாது. ஆனால் மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் நிச்சயம் மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால் முதுகு, கைப்பகுதியில் வலி வரக் கூடும். வைரஸ் தொற்று ஏற்பட்ட பின் மூட்டுகளில் வீக்கம், வலி, சோர்வு ஆகியவை வரலாம். இதை சரிசெய்ய போதுமான ஊட்டச்சத்துக்கள், உடற்பயிற்சிகள் அவசியம். மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் காயங்கள் ஏற்பட்டால் அதன் பின்னர் எலும்புகளில் பாதிப்பு, தொற்றுகள், கட்டிகள் ஆகியவை வரும் வாய்ப்புள்ளது. இதை ஸ்கேன் மூலம் தான் அறிய முடியும். வலி தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

சில குழந்தைகளுக்கு வாத நோய்கள் அல்லது அழற்சி இருக்கலாம். இதனால் காலை எழும்போது அதிக வலியுடன் நாளை தொடங்குவார்கள். பின்னர் வலி படிப்படியாக குறைவது மாதிரி தோன்றும். மூட்டுசார் அழற்சி நிலைகளினால் இப்படி இருக்கலாம். இரத்த பரிசோதனை செய்தால் உறுதியாகும்.

தொடர்ச்சியான எலும்பு வலி, எடை குறைதல், பலவீனம், பசியின்மை போன்றவை இரத்தப் புற்றுநோய் (லுகேமியா) அறிகுறியாக இருக்கலாம். இது அரிய நோய். ஆனாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பதுநல்லது.

குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து வலிகளும் உடல் சார்ந்தவையாக மட்டுமே இருக்க முடியாது. சில வலிகள் அவர்களுடைய மனநலம் சார்ந்தது. உங்களுடைய குழந்தை பயம், தனிமை, மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அது வலியாக உடலில் வெளிப்படும். ஆகவே குழந்தையிடம் எப்போதும் ஒரு நண்பரை போல நெருக்கமாக இருங்கள். பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அவர்களுடன் மனம் திறந்த உரையாடல்களை வைத்திருத்தல் நல்லது.