ஆண் பிள்ளைகள் பூப்படைந்தால் எப்படி தெரியும்? பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய அறிகுறிகள்
பெண் பிள்ளையை பெற்ற பெற்றோரை போலவே ஆண் பிள்ளையை பெற்றோருக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன. பெண் பிள்ளைகள் பூப்படையும் போது அதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரியும். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு இது போன்ற துல்லியமான அறிகுறிகளோ, கொண்டாட்டங்களோ தெரிவதில்லை. பெண் பிள்ளைகள் போலவே ஆண் பிள்ளைகளும் பருவமடைகிறார்கள். அதை குறித்து பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கு காணலாம்.
பூப்படைதல் வயது
ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் சராசரியாக ஒரே மாதிரியான வயதில் தான் பூப்படைதல் தொடங்குகிறது. சராசரி வயதெனில் அது 11 வயதாகும். சில பிள்ளைகள் அதற்கு முன்பே பருவமடைகிறார்கள். இதற்கு மரபணு, வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. குறைந்தபட்சம் ஒன்பது வயது முதல் 14 வயது வரை பிள்ளைகள் வயதுக்கு வருவார்கள்.
உடல் மாற்றங்கள்
ஆண்கள் பருவ வயதை அடையும்போது உடலளவில் சில மாற்றங்கள் ஏற்படும். அது அவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடியது. இதனை பெற்றோர் கவனித்து அறிய முடியாது. இதை பிள்ளைகள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.
என்னென்ன மாற்றங்கள்?
குழந்தை போல தெரிந்து முகம் திடீரென பக்குவம் அடைந்த ஆண்மகனைப் போல தோன்றும். குரல் கனீரென மாறும். மீசை, தாடி போன்ற முடி வளர்ச்சி இருக்கும். சற்று உடல் எடை அதிகமாகிவிடும். உயரமும் அதிகரிப்பதோடு அகன்ற தோள்பட்டையும், கை, கால், தசை வளர்ச்சி என ஆளே மாறிவிடுவார்கள். இது எல்லாமே 11 முதல் 14 வயதுக்குள் சடசடவென நடந்துவிடும்.
வித்தியாசமான நடவடிக்கை
முன்பை போல அல்லாமல் சுகாதார நடவடிக்கைகளில் கூட அவர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். குளிக்கும்போது அதிக நேரம் எடுத்துக் கொள்வது, அடிக்கடி ஹேர்ஸ்டைல் மாற்றுவது, கண்ணாடி முன் மணிக்கணக்காக நிற்பது, கச்சிதமான ஆடைகளை உடுத்த மெனக்கெடுவது என புதிதாக நடந்து கொள்வார்கள்.
முகத்தில் மாற்றம்
சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். அதனால் முகப்பருக்கள் அதிகமாகலாம். ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். வியர்வை அதிகமாக சுரப்பதால் அவர்களின் மீது வியர்வை வாசம் அதிகம் வீசக் கூடும். பெற்றோராகிய நீங்கள் அவர்களுக்கு வாசனை திரவியங்கள் பயன்படுத்த அறிவுறுத்தலாம். முகத்தை பராமரிக்க சொல்லிக் கொடுக்கலாம்.
மார்பில் மாற்றம்
ஆண்களுக்கும் அவர்கள் பருவமடையும் போது பெண்களைப் போலவே மார்பகங்களில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வளர்ச்சியை நிறுத்திக் கொள்ளும்; இயல்பானது என்பதை ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுப்பது அவசியம். சில பிள்ளைகளுக்கு மட்டும் பூப்படைதல் வயதை கடந்த பின்னும் மார்பகங்களில் வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும் அவர்கள் மருத்துவரை அணுகுவது கட்டாயம்.
அந்தரங்க மாற்றங்கள்
ஆண் பிள்ளைகளுக்கு முதலாவதாக பூப்படைதல் அறிகுறியே ஆண்குறியில் தான் ஆரம்பம் ஆகும். அவர்களின் ஆண்குறி விரைகள் பெரியதாக மாறும். ஆண்குறி நீளம் அதிகமாகும். அந்தரங்க உறுப்பில் முடிகள் கூட வளரலாம். குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியில் பருக்கள் வர வாய்ப்புள்ளது. அதாவது குட்டி முத்து போல புடைப்பு வரலாம். இவை பார்க்க பருக்கள் மாதிரி இருப்பதால் பயப்பட வேண்டாம். அது பாதிப்பை ஏற்படுத்தாது.
விந்து வெளியேற்றம்
இரவில் பதின்பருவ ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறலாம். இது அந்தரங்கமான கனவுகள், எண்ணங்களால் ஏற்படலாம். எந்த கனவும் இல்லாமலும் விந்து வெளியேறலாம். இதை குறித்து அவர்கள் பயப்பட தேவையில்லை. இயல்பான மாற்றம் என பெற்றோர் பிள்ளைகளிடம் சொல்ல வேண்டும். இது குறித்து பெற்றோர் முன்கூட்டியே பிள்ளைகளிடம் பேசுவது அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும்.
எதிர்பாலின ஈர்ப்பு
இந்த பருவ வயதில் அவர்கள் ஹார்மோன் செய்யும் மாயாஜாலங்களில் எதிர்பாலின ஈர்ப்பு, தன்பாலின ஈர்ப்பு என ஏதேனும் ஓர் ஈர்ப்பால் கவரப்படுவார்கள். இது இயல்பானது என பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும். பதட்டம் கொள்ள தேவையில்லை என்றும், படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் பண்பான முறையில் எடுத்து சொல்லுங்கள்.
பிள்ளைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமான சிந்தனையையும், தகவல்களையும் பெற்றுக் கொள்கின்றனர். அதற்கு ஏற்றபடி அவர்களுடைய வாழ்க்கை முறையும் மாறிவிடுகிறது. பருவமடையும் வயதில் அவர்கள் தனிமையை அதிகம் விரும்புவார்கள். இதற்கு முன் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்து போல இந்த வயதில் நெருக்கம் காட்டமாட்டார்கள். சற்று விலகி நிற்பார்கள். இந்த நேரத்தில் அவர்களைப் பெற்றோர் புரிந்து கொள்வது அவசியம். அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாதவாறு நல்வழிப்படுத்துவது பெற்றோர் கடமையாகும். இதற்கு பிள்ளைகளுடன் உரையாடுவது அவசியம். இந்த மாதிரியான நேரங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஆண் பிள்ளைகள் மாறிவிடுவார்கள். கோபப்படுவது, மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது, மணிக்கணக்கில் போன் பேசுவது என வித்தியாசமாக நடவடிக்கைகள் மாறும். இதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வயதில் ஏற்படும் மாற்றங்களை குறித்து அவர்களுடன் உரையாடுவது போல வீணான மனக் கசப்புகளை தவிர்க்கும்.
