- Home
- Lifestyle
- Parenting Tips : குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசாம இருக்கனுமா? கண்டிப்பா பெற்றோர் இதை செய்யனும்!!
Parenting Tips : குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசாம இருக்கனுமா? கண்டிப்பா பெற்றோர் இதை செய்யனும்!!
குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பேச கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு அல்லது பேசுவதை தவிர்க்க பெற்றோர் சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம்.

பெற்றோருக்குரிய குறிப்புகள்
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி என பல்வேறு டிஜிட்டல் தளங்களை பார்க்கும் வசதி உள்ளது. இதிலிருந்து சில நல்ல விஷயங்களையும் பல கெட்ட விஷயங்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். அதில் கெட்ட வார்த்தைகளும் அடக்கம்.
தற்போதைய காலத்தில் வெளியாகும் திரைப்படங்களில் கூட கெட்ட வார்த்தைகளை பேசுவதை அதிகமாக சித்தரிக்கின்றனர். இது தவிர பார்க், மார்கெட், மைதானம் என வெளியிடங்களிலும் மக்கள் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளை குழந்தைகள் கேட்க நேரிடுகிறது. இப்படி அவர்களை சுற்றி கெட்ட வார்த்தைகள் அதிகம் புழக்கத்தில் இருக்கும் சமயத்தில் அவர்கள் அதை தவிர்ப்பது கடினமான விஷயமாகும். ஆனாலும் சிறு வயதில் குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை கற்பதும், பேசுவதும் சரியான விஷயம் அல்ல. இது தவிர்க்க ஒவ்வொரு பெற்றோரும் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என இந்த பதிவில் காணலாம்.
குழந்தை கெட்ட வார்த்தை பேசுகிறார்களா?
குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பிக்கும் தொடக்க காலத்திலேயே பெற்றோர் அதைக் கண்டித்து திருத்த வேண்டும். சில வார்த்தைகளை குழந்தைகள் பயன்படுத்தும் போது அவை நல்ல வார்த்தைகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அந்த வார்த்தைகளை சொல்வது அவர்களுடைய மதிப்பை குறைக்கும் என எடுத்துரைக்க வேண்டும். உதாரணமாக உங்களுடைய குழந்தை ஒரு கெட்ட வார்த்தையை சொல்வதை நீங்கள் கேட்கும் போது அவர்களை அமர வைத்து அது தவறு என சொல்ல வேண்டும். "இந்த வார்த்தையை நீ பேசும் போது உனக்கு பிடித்த இனிப்பு பண்டத்தை தரமாட்டேன்" என சொல்லலாம் அல்லது அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை காண அனுமதி கிடையாது என்றும் அறிவுறுத்தலாம். நல்ல வார்த்தைகளை பேசும் போது மட்டுமே இதற்கான வாய்ப்புகளை நீங்கள் தருவதாக கூறலாம் .
மன்னிப்பு
உங்களுடைய குழந்தை வெளி ஆட்களிடம் கெட்ட வார்த்தை பேசும் போது அவர்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லிக் கொடுக்க வேண்டும். உங்களுடைய குழந்தை அறியாமல் பிறரை பார்த்து ஆபாசமான வார்த்தை அல்லது ஏதேனும் கெட்ட வார்த்தையை பயன்படுத்தினால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீங்கள் சொல்லிக் கொடுப்பது அவசியம்.
கோபம் வேண்டாம்!
உங்களுடைய குழந்தை கெட்ட வார்த்தை பேசும் போது அதை தடுக்கும் நோக்கத்தில் அவர்களிடம் நீங்கள் உச்சபட்சமாக கோபப்படும்போது அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். நீங்கள் அவர்களிடம் எதிர்வினையாற்றும்போது அவர்கள் குழப்பமடைவார்களே தவிர அதை பயன்படுத்தக் கூடாது என்பது அவர்களுக்கு தெரியாது. அதனால் கோபப்படுவது, அடிப்பது போன்ற விஷயங்களை செய்யாமல் அவர்களுக்கு புரியும் மொழியில் உணர்த்தலாம்.
கண்டித்தல்
குழந்தைகள் பெரும்பாலும் கெட்ட வார்த்தைகளை சுற்றுப்புறத்திலிருந்து கற்றுக் கொள்வார்கள். அதை மற்றவர்கள் பேசும்போது கற்றுக்கொண்டு சொல்வார்களே தவிர, அவர்களுக்கு அதற்கான அர்த்தம் தெரியாது. நீங்கள் கண்டிக்க வேண்டியது குழந்தைகளை அல்ல; முதலில் அந்த வார்த்தையை பயன்படுத்திய பெரியவரை தான்.
பெற்றோர் கடமை
உங்களுடைய குழந்தை மற்றவர்களிடம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் போது அவர்கள் அர்த்தம் தெரிந்து பேசினாலும், தெரியாமல் பேசினாலும் தவறுதான். இதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும். அவர்கள் கோபத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் கோபத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். இந்த வார்த்தையை கோபத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதை புரிய வையுங்கள்.
ஆளுமை சிக்கல்
குழந்தைகளுக்கு அவர்களுடைய சிறு வயதிலேயே சில பழக்கங்களை கற்றுக் கொடுப்பது அவசியம். சிறு குழந்தை தானே கெட்ட வார்த்தை பேசினால் என்ன? என நீங்கள் கண்டு கொள்ளாமல் விட்டால் அவர்களுடைய ஆளுமையில் அதுவே பிற்காலத்தில் பிரச்சனையாக வடிவெடுக்கலாம். சபை நாகரீகம் தெரியாமல் வளர்வார்கள். ஆகவே சிறு வயதிலேயே அவர்கள் கெட்ட வார்த்தை பேசும்போது கண்டிப்பது அவசியம்.
முன்னுதாரணம்
உங்களுடைய குழந்தையை கெட்ட வார்த்தை பேசக்கூடாது என அறிவுறுத்திவிட்டு நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ கெட்ட வார்த்தையை பயன்படுத்தினால் அது நல்ல முன்னுதாரணமாக இருக்காது. அதனால் முடிந்தவரை நீங்கள் நல்ல வார்த்தைகளை பயன்படுத்துவது உங்களுடைய குழந்தைகளை நல்வழிப்படுத்த உதவும்.