இனி எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்..! அமலுக்கு வந்தது "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு"..! 

"ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டத்திற்ன் முன்னோட்டமாக தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் முதற்கட்டமாக நெல்லை மற்றும் தூத்துக்குடியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் படி, ஆந்திரா கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒரு நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை சோதனையாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் தற்போது இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்கு மட்டும் இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டு, அடுத்த வாரம் முதல் மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு ரேஷன் கடையிலும் இனிமேல் பொருட்கள் வாங்குவதற்கு அவர்களுடைய ஆதார் கார்டு அல்லது ஸ்மார்ட் கார்டு அல்லது செல்போன் எண்ணை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எங்கிருந்தாலும் வாங்கிக் கொள்ள முடியும். இப்படி ஒரு அற்புத திட்டத்தால் வீட்டை விட்டு படிப்புக்காகவும், வேலைக்காகவும் வெளியில் தங்கி இருப்பவர்களுக்கு மாபெரும் பயனுள்ள ஒரு திட்டமாக இந்த திட்டம் அமைந்துள்ளதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 2 கோடியே 5 லட்சம் ரேஷன் கார்டு பயன்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு 35 ஆயிரத்து 233 ரேஷன் கடைகள் மூலமாக பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.