2008 ஜனவரியில் டாடா நிறுவனம் குறைந்த விலை காரான நானோவை அறிமுகம் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. குறைந்த விலை காரான நானோ மக்களின் கார் என்ற விளம்பரத்துடன் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. தொடக்கத்தில் போட்டி போட்டு மக்கள் நானோ காரை வாங்கினர். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் விற்பனை குறைந்து கொண்டே சென்றது.

தற்போது நானோ கார் விற்பனை நடக்கிறதா என்று கேள்வி கேட்கும் அளவுக்கு அதன் நிலைமை உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் ஒரு நானோ கார் கூட தயாரிக்கவில்லை. கடந்த பிப்ரவரியில் மட்டும் ஒரே ஒரு நானோ கார் விற்பனையானது. அதேசமயம் 2018ல் ஜனவரி-செப்டம்பர் காலத்தில் 297 நானோ கார்கள் தயாரிக்கப்பட்டது. 299 கார்கள் விற்பனையானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நானோ காருக்கு கிட்டத்தட்ட எதிர்காலம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ள போதிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் நானோ கார் தயாரிப்பை கைவிடுவது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கவில்லை. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் நானோ காருக்கு புத்துயிர் கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில் அந்த நிறுவனம் உள்ளதாக தெரிகிறது.