சத்தியமங்கலத்தை சேர்ந்த தனியார் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து கொரோனா தொற்று காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவியை வடிவமைத்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த தனியார் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர்கள் மூன்று பேர் கொண்ட குழுவினர் கோவிட் 19 தாக்குதலினால் ஏற்படும் காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவியை வடிவமைத்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அல்ட்ராசோனிக் சென்சார்களை கொண்டு இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவியை தொழிற்சாலைகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், மால்கள் போன்றவற்றின் நுழைவாயில்களில் பொருத்தப்படும் பொழுது உள்ளே நுழையும் நபர்களின் உடல்வெப்பநிலை, அறிகுறிகளை இக்கருவி கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட நபர்களை உள்ளே அனுமதிக்காது.பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி ஆகியவற்றை கண்காணிக்கவும் உதவுகின்றது. மேலும் மிகக் குறைவான நேரத்தில் அதிகப்படியான மக்களை பரிசோதனை செய்யவும், நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்களை தொடர் கண்காணிப்பு செய்யவும் இக்கருவி உதவும் எனவும் இக்கருவியை வடிவமைத்த பேராசியர்கள் தெரிவிக்கின்றனர்.