40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மிக பிரம்மாண்ட விழாவான அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது. 13 ஆம் தேதியான நேற்று வரை மக்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் குறிப்பாக வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எனவே பாதுகாப்பு நலன் கருதி வார இறுதியில், கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் இவர்கள்  கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

தற்போது காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சுவாமி தரிசன நேரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், விடியற்காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்குகிறது. பக்தர்களின் வசதிக்காக தற்போது 20 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், அது போதுமானதாக இல்லை என்பதால் கூடுதலாக 10 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தவிர 35 கழிப்பறைகள், ஆம்புலன்ஸ், வரிசையில் நீண்ட நேரம் இருக்கும் மக்களுக்கு குடிநீர் என இவை அனைத்தையும் ஏற்பாடு செய்யவும் மும்முரம் காட்டப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார் ஆட்சியர் பொன்னையன்