நந்தனம் கோர விபத்தில் திருப்புமுனை..! இன்றைய இளசுகளுக்கு புது பாடம்...! 

சென்னை நந்தனம், ஒய்.ஏம்.சி.ஏ கல்லூரி எதிரே நடந்த கோர விபத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் இன்றைய இளசுகளுக்கு ஒரு பாடம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

எழும்பூரில், உள்ள தனியார் கம்பெனியில் ஆந்திராவை சேர்ந்த பவனி, நாகலட்சுமி, மற்றும் சிவா ஆகியோர் என்ஜினியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் நேற்று வேலைக்கு செல்வதற்காக ஒரே பைக்கில், சென்றுள்ளனர்.

அப்போது, பாரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால், இவர்கள் சென்ற பைக் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறிய மூவரும் கீழே விழுந்தனர். 

இந்த கோர சம்பவத்தில் பவனி (22 ), நாகலட்சுமி (22 ) ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு,உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். சிவா (22 ) என்கிற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நந்தனம் பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து போலீசார், இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.மேலும் சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்த போது, வீட்டில் இருந்து கிளம்பியது முதல் விபத்தை ஏற்படுத்தும் வரை ஒவ்வொரு  சிக்னலிலுமே அதிவேகமாக தான் இவர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து உள்ளனர். பின்பக்கம் அமர்ந்து இருந்த பெண்கள் ஹெல்மெட் அணியவில்லை... சிவா மட்டும் ஹெல்மெட் அணிந்து இருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இருந்தபோதிலும், கவலைக்கிடமான நிலையில் தீவிர  சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாலை போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என எவ்வளவு தான் கிடுக்குபிடி  செய்தாலும், ஹீரோயிசம் செய்யும் ஆண்களுக்கு இது ஒரு பாடம்.. வாகன சோதனையில் இருந்து தப்பித்து, போக்குவரத்து போலீசாரை ஏமாற்றி விட்டதாக எண்ணி நண்பர்களிடம் சிரித்து பேசி சொன்னாலும், நம்  உயிரையே  விட்டு மாய்த்துக்கொள்ளும் போது தான் தெரியும் யார் உண்மையில் ஏமாந்து நிற்கிறோம் என்று...