முகேஷ் அம்பானி வீட்டில் திருமணம்; ராஜஸ்தானில் முடிந்த ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட் நிச்சயதார்த்தம்!!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ராஜஸ்தானில் இன்று நிச்சயதார்த்தம் நடந்தது.
நீண்ட நாட்களாக ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் காதலித்து வருவதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடைபெற்றது. தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட், ஷைலா மெர்ச்சென்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்.
முறையாக பரதநாட்டியப் பயிற்சி பெற்றவர் ராதிகா மெர்ச்சன்ட். கடந்த ஜூன் மாதம், முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் ராதிகா மெர்ச்சன்ட் பரதநாட்டிய அரங்கேற்ற விழாவை தொகுத்து வழங்கினர். ஸ்ரீ நிபா ஆர்ட்ஸின் குரு பாவனா தக்கரின் சீடர் ராதிகா. ரிலையன்ஸ் தலைவரின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, நிறுவனத்தின் புதிய எரிசக்தி வணிகத்தை நடத்துவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன விவகாரங்களின் இயக்குநரான பரிமல் நத்வானி, கோயிலில் நடைபெற்ற ஆனந்த் மற்றும் ராதிகாவின் நிச்சயதார்த்தத்தை உறுதிபடுத்தியுள்ளார். இவர் வாழ்த்தி ட்வீட்டும் பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட்டில், ''நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடந்த ரோகாவில் பங்கேற்ற ஆனந்த் மற்றும் ராதிகாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பகவான் ஸ்ரீநாத் ஜியின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயதார்த்த விழாவில் ஆனந்த் நீல நிறத்தில் பாரம்பரிய குர்தா அணிந்து இருந்தார். ராதிகா பீச் நிறத்திலான லெஹங்கா அணிந்து இருந்தார்.
யோர்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தவர் ராதிகா. 2018 ஆம் ஆண்டில், இஷா அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்வில் இஷா அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவுடன் இணைந்து ராதிகா மெர்ச்சன்ட் நடனம் ஆடி இருந்தார். அப்போதிருந்து, முகேஷ் அம்பானியின் ஒவ்வொரு குடும்ப நிகழ்விலும் ராதிகா காணப்படுகிறார். ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த நிகழ்வின்போது நடிகர் ஷாருக்கான், ஆனந்த் அம்பானியை ராதிகாவை வைத்து கிண்டல் செய்து இருந்தார். அப்போது இருவருக்குமான காதல் வெளியுலகிற்கு தெரிய வந்தது.