ஆனந்தத்தை வெளிப்படுத்திய அன்னை..! 

மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும் ஒரு சூழல் நிலவுவதால் நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாட்டமாக உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது.

அதன்படி இன்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. 300க்கும் மேற்பட்ட அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வரும் பாஜக மீண்டும் மெஜாரிட்டியுடன் கூட்டணி கட்சி ஆதரவு இல்லாமலேயே ஆட்சியை பிடிக்கும் என்ற நிலைமை தற்போது வரை நிலவி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதுமே பாஜகவினர் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசித்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார், பொதுமக்களுக்கும் செய்தியாளர்களுக்கும்  நன்றி தெரிவிக்கும் விதமாக தன்னுடைய வீட்டிலிருந்து தள்ளாடிக்கொண்டே வெளியில் வந்து இரு கைகளையும் கூப்பி அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அப்போது தன் மகன் நரேந்திர மோடியின் வெற்றியை நினைத்து, ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வரும் கட்சியினர் முதல் பொதுமக்கள் வரை மோடிக்கு நன்றி தெரிவித்து வரும் நிலையில், தன் மகனின் வெற்றியை நினைத்து பாஜகவின் வெற்றிக்கு வாழ்த்து விதமாகவும் மோடியின் தாயார் வீட்டை விட்டு வெளியே வந்து அனைவருக்கும் நன்றி செலுத்தியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.