விவசாயிகளின் வங்கி கணக்கில் விரைவில் ..! 

ஏசி அறையில் அமர்ந்து இருப்பவருக்கு விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய ரூ.6000 பற்றிய அருமை தெரியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், லே விமான நிலையத்தில், புதிய உள்நாட்டு முனையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தார்.

பல்வேறு கிராமங்களில் வசிக்கும் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அருமையான திட்டம் பற்றி ஏசி அறையில் அமர்ந்து இருப்போருக்கு தெரியாது என, இந்த திட்டத்தை எதிர்த்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர். 

ஏழை விவசாயிகளுக்கு அறிவித்துள்ள இந்த ஆறாயிரம் ரூபாயை மூன்று தவணைகளில் அவரது வங்கி கணக்கில் செலுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக முதல் தவணை மிக விரைவில் ஏழை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கோடைகாலத்தில் தட்பவெட்ப நிலையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களின் நலனை மனதில் கொண்டு இது போன்ற அற்புதமான உதவியை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது 2008 2009 ஆம் ஆண்டில் ஆறு லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் அப்போது உறுதி அளித்தது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வெறும் 52 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்தது என குறிப்பிட்டு பேசினார். அதைவிட இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர்கள் தள்ளுபடி செய்யப்பட்டவர்களில் 30 லட்சம் பேர் அதற்கான தகுதி இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றே பல வாக்குறுதிகளை கொடுத்து அதை நிறைவேற்றாமல் இருப்பது காங்கிரஸ் கட்சியினர் என குறிப்பிட்டு பேசினார் மோடி.