கொசுவினால் ஏற்படும் பல்வேறு நோய்களை தடுக்கும் விதமாக, உலக அளவில் பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. 

குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள  குளம், குட்டை, மற்றும் தண்ணீர் தேங்கும் நீர்நிலைகளில் ‘கம்பூசியா அஃபினிஸ்’ (Gambusia affinis) என்கிற மீன்களை வளர்க்கின்றனர். 

இவை கொசுக்களின் லார்வாக்களைத் தின்றுவிடும். இதனால் கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பில்லாமல் போகும். கொசுக்களை வேரோடு அழிக்கும் ஒரு தொழில் நுட்பமாகவே இந்த மீன்னை அந்நாட்டு மக்கள் பார்க்கின்றனர். 

இதே போல் பிரேசில் நாட்டில், சற்று வித்தியாசமாக கொசுக்களை முட்டை விடாமல் தடுக்கும் விதமாக அவற்றை மலடாக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.  குறிப்பிட்ட பருவத்துக்குப் பிறகு கொசுக்கள் வளர்வதற்கு டெட்ராசைக்ளின் மருந்து தேவைப்படும் வகையில், கொசுக்களின் மரபணுக்களை மாற்றி அமைத்து, அந்தக் கொசுக்களை ஒரு பண்ணையில் வளர்த்து வெளியில் விடுகின்றனர். இந்தக் கொசுக்களோடு மற்ற கொசுக்கள் இணைந்து இனப்பெருக்கம் செய்து பிறக்கிற கொசுக்கள், தொடர்ந்து வளர வேண்டுமானால் அவற்றுக்கு டெட்ராசைக்ளின் மருந்து தேவைப்படும். அது கிடைக்காதபோது அவை வளரவும் முடியாமல், இனப்பெருக்கமும் செய்ய முடியாமல் இறந்துவிடும்.

ஆஸ்திரேலியாவில்,  வால்பேட்சியா ( Wolbachia ) எனும் பாக்டீரியாவை ஆண், பெண் கொசுக்களின் உடலில் செலுத்திவிடுகின்றனர். இந்த பாக்டீரியா உள்ள ஆண் கொசுவோடு இது இல்லாத பெண் கொசு இனவிருத்தி செய்யுமானால், அந்தக் கொசுவால் முட்டை பொரிக்க முடியாது. 

பாக்டீரியா உள்ள பெண் கொசுவுடன் பாக்டீரியா உள்ள ஆண் கொசு இனவிருத்தி செய்யுமானால், பிறக்கிற கொசுவுக்குள் வால்பேட்சியா பாக்டீரியா நுழைந்துவிடும். இப்படிப் புதிதாகப் பிறக்கிற கோடிக்கணக்கான கொசுக்களுக்குள் இந்தப் பாக்டீரியா புகுந்து புதிய கருத்தரிப்புக்குத் தடை போடும். ‘இதனால் கொசு உற்பத்தி குறையும். 

இப்படி செய்வதால் கொசுவினால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவுவது  குறையும். இதே போல் ‘லேன்சட்’ மருத்துவ ஆராய்ச்சி இதழ். இந்தியாவிலும் இம்மாதிரியான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கு நம் அரசுகள் புதிய திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதே பலரது ஆவல்.