அரசு மட்டுமே செய்ய முடியாது... மக்களும் கைக்கோர்க்க வேண்டும்...! 

கடந்த நான்கு மாத காலமாகவே தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. சென்னையில் குடிநீர் பஞ்சத்தால் பல்வேறு அலுவலகங்கள், ஹாஸ்டல், ஹோட்டல் என ஒவ்வொன்றாக சில நாட்கள் மூடப்பட்டு இருந்தன. இருப்பினும் இன்றளவும் ஒரு சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. 

இதற்கிடையில் கடந்த இரண்டு வார காலமாக அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்ற வாரம் சென்னையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் சைதாப்பேட்டை, கிண்டி, தேனாம்பேட், நந்தனம், தி நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் பஞ்சம் சற்று குறைந்தது.

இதற்கிடையில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தவிர கோவையில் "நல்லறம் அறக்கட்டளை" மூலமாக பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் அமைச்சர். 

அந்த வகையில் சமீபத்தில் 'எருமாலன்குட்டை' குளத்தையும் நல்லறம் அறக்கட்டளை சார்பாக தூர்வாரப்பட்டது. இந்த நிலையில் மழைநீர் சேமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் எஸ் பி வேலுமணி.

 

அதில்,
 
"மழைநீர் சேமிப்பின் அவசியம் பற்றியும் அதனால் நமக்கு மட்டுமின்றி நம் அடுத்த தலைமுறைக்கும் விளையும் பயன்கள் பற்றியும் அனைவரும் அறிந்ததே... சமீபத்தில் பெய்த மழையில் எத்தனை சதவிகித நீரை நாம் சேமித்து வைத்து இருக்கிறோம்? அரசு தொடர்ந்து தன் கடமையை செய்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனால் மழைநீர் சேமிப்பை ஒரு குழுவோ ஒரு அமைப்போ ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல.. அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பதே இதற்கு நிரந்தரத் தீர்வாகும்.புரட்சித்தலைவி அம்மாவின் பாதையில் நமது மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதை கருத்தில் கொண்டு தமிழக மக்கள் அனைவரையும் வடகிழக்கு பருவ மழைக்கு முன் மழைநீரை சேமிக்கும் மகத்தான பணியில் ஈடுபடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை  நீரையும் சேமிப்பது என்று உறுதி கொள்வோமாக..

நமக்காக.. நாட்டுக்காக.. நாளைக்காக...." என பதிவிட்டு உள்ளார்.