TNPSC முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் ஜெயில் உறுதி..! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்...! 

தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பாக இருக்கக்கூடிய ஒரு டாபிக் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தான். இது குறித்து ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சி தொடர் குற்றசாட்டை முன்வைத்து வருகிறது. ஆனால், திமுக ஆட்சி காலத்திலேயே பெரும் ஊழல் நடைப்பெற்று உள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 2 ஏ போட்டித் தேர்விலும், 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 போட்டி தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இது குறித்த விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ள தமிழக அரசு  உத்தரவிட்டது. 

விசாரணையின் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுப்பிடிக்கப்பட்டால், அவர் யாராக இருந்தாலும், எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார் முதல்வர். அதன்படி தற்போது வரை 51 பேருக்கும் மேல் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இருந்தாலும், திமுக தொடர் குற்றசாட்டை ஆளுங்கட்சி மீது சுமத்தி வருகிறது. ஆனால் 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உதவியோடு திமுகவின் மிக முக்கிய புள்ளிகள், உயர்மட்ட தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் அதை இப்போது ஒவ்வொன்றாக களையெடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதன்படி 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சியின் போதுதான், தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையத்தில் பல போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு பல முறைகேடுகளும் நிகழ்ந்து உள்ளது. குறிப்பாக திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கே. என். நேரு, வீரபாண்டி ஆறுமுகம், திருச்சி செல்வராஜ் மற்றும் திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை அமரமூர்த்தி உள்ளிட்டோர், அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியில் இருப்பவர்களுடன் கூட்டு சேர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பதனை 2011ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தெரியவந்தது.

நிலைமை இப்படி இருக்க... இதற்கு எதிர்க்கட்சி தலைவரான மு.க ஸ்டாலின் என்ன சொல்லப்போகிறார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் மறைத்துவிட்டு தற்போது ஆளும் அதிமுக பற்றி அரசியல் காழ்புணர்ச்சிக்காக வீண்பழி சுமத்தி களங்கம் ஏற்படுத்துகிறார் மு.க ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார். 

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை

2011ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு நடைபெறாமல் இருக்க, தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் வரம்பிற்குள் கொண்டுவர 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று ஆணை பிறப்பித்திருந்தார். 

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதன் படி திமுக ஆட்சிக்காலத்தில் 2006 முதல் 2008 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் தகுதியற்ற பணியாளர்களை தேர்வு செய்து ஊழல் செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு சில லட்சங்கள் இடைத்தரகர்கள் மூலமாக கொடுக்கப்பட்டு உள்ளது. பல் மருத்துவர் பணி, மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் சில போட்டித் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்ததின் பேரில் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து (ஓய்வு) மற்றும் 13 உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அக்டோபர் 14ம் தேதி 2011 ஆம் ஆண்டு அவர்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையின் போது, 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அன்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே என் நேரு தங்களுடைய அலுவலக முத்திரையுடன் கூடிய கடிதத்தில் இரண்டு நபர்களுக்கு, தேர்வாணைய தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார் என்பதனை கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்  உதவி பல் மருத்துவர் பணியிடங்களுக்கு ஒரு பரிந்துரைக் கடிதமும், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் அளித்துள்ள பரிந்துரை கடிதமும், தேர்வாணைய தலைவர் ஆர். செல்லமுத்து அவர்களின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் திமுக உறுப்பினர் திரு டி.பாளை அமரமூர்த்தியும் இதே போன்று பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். இது தவிர போட்டித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள், வெளியிடப்படாத தேர்வாளர்களின் பெயர் பட்டியல் மற்றும் பரிந்துரை கடிதங்கள் ஆகியவையும் இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவியாளர், வருவாய்த்துறை, புள்ளியியல் ஆய்வாளர், உதவி செயற்பொறியாளர் போன்ற பதவிகளுக்கான வாய்மொழித் தேர்வுகளில் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட 142 நபர்களில் 127 நபர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது சோதனையின்போது தெரியவந்தது. மேலும் இரண்டு தேர்வாணைய உறுப்பினர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத சில லட்சங்கள் ரொக்கம் தொகையாக கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"இப்படிப்பட்ட மெகா ஊழல்கள் நடைபெற்றபோது ஆட்சியில் இருந்தது திமுக தான். இப்படி பெரும் ஊழல் செய்தவர்களை பெரும் பதவியில் உட்கார வைத்து அழகு பார்த்தது திமுக தான். இப்படி ஒரு தருணத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் வரம்பிற்குள் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த 2011- ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதை எதிர்த்து, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தாங்கள் செய்த தவறுகளை மறைக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு இன்றளவும் நிலுவையில் இருக்கின்றது. தாங்கள் செய்த  தவறுகளை மறைத்து தற்போது ஆளுங்கட்சி மீது வீண்பழி சுமத்துகின்றனர்.

 மேலும் இந்த வழக்குவிசாரணை  வரும் மார்ச் 19ம் தேதி வருகிறது. அன்றைய தேதியில் தெரியும் யார் குற்றவாளி? யார் ஊழல் செய்து உள்ளார்கள் என்பது... ஊழல் செய்த யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஜெயிலுக்கு செல்லும் நிலை ஏற்படும்" என தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்
 
மேலும், இனி வரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் முறைகேடு நடக்காத அளவுக்கு தீவிர நடவடிக்கை எடுத்து, இதற்கு முன் முறைகேடு செய்துள்ள எந்த ஒரு நபராக  இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும், இதன் தொடர்ச்சியாக தான் தற்போது வரை 50 கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தற்போது அரசு பணியாளர் தேர்வாணையத்தில் போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் தேர்வாணையத்திற்கு வெளியே நடத்தப்பட்டதாக தான் விசாரணையில் தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. அதன் பேரில் தற்போது வரை 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிந்தவுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்படுபவர்கள், எத்தகைய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கையை அதிமுக அரசு எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.