ஊரடங்கால் தாயை பார்க்காமல் பலவீனமான குழந்தை..! 2 வார தவிப்புக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.! 

ஊரடங்கு உத்தரவால், கடந்த 2 வாரங்களாக பிரிந்து தவித்து வந்த தாயும் சேயும் சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம்  நெல்லையில் நடைபெற்று உள்ளது. இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி உதவி செய்துள்ளனர்.

திருநெல்வேலி : தென்காசி மாவட்டத்தில் வசிக்கக்கூடிய தாய் தந்தையரை பார்க்க சென்னையில் வசித்து வந்த மகனும்- மருமகளும்(சுப்பிரமணி- ரங்கா தம்பதியினர் ) கடந்த 3 வாரங்களுக்கு முன்பாக வந்திருந்துள்ளனர். அப்போது அவசர  வேலைக்காக, அவர்களது இரண்டரை வயது குழந்தையை மட்டும் தென்காசியில் தன் பெற்றோரிடம் விட்டுவிட்டு சென்னை திருப்பியுள்ளனர் 

இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அவர்களால் குழந்தையை மீண்டும் வந்து அழைத்து செல்ல முடியாத சூழலில் ஏப்ரல் 6 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் அனுமதி கேட்டு இ-பாஸ் பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அனுமதி கிடைக்காத நிலையில், மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் நாளுக்கு நாள் குழந்தையும் பலவீனம் அடைந்து உள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர், முன்னாள் நெல்லை மேயர் புவனேஸ்வரியை தொடர்பு கொண்டு தொலைபேசியில் விவரத்தை தெரிவித்து உள்ளனர். உடனடியாக குழந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, ஒரு பக்கம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரையும், அமைச்சர் ஜெயக்குமாரையும் தொடர்பு கொண்டு, குழந்தையை பிரிந்து சென்னையில் தவித்து வரும் பெற்றோர்களுக்கு இ-பாஸ் வழங்க கேட்டுக்கொண்டதன் பேரில் உடனடியாக அவர்களுக்கு அனுமதி கிடைத்து உள்ளது.

அனுமதி கிடைத்த உடன், குழந்தையை காண கண்ணீர் மல்க...பெற்றோர்கள் சென்னையில் இருந்து தென்காசி  புறப்பட்டு சென்று குழந்தையை பார்த்துள்ளனர். பின்னர் தாயை பார்க்காமல், உடல் நெளிந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று தேவையான சிகிச்சை கொடுத்து, தற்போது நலமுடன்  இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தையை பார்க்க உதவிய நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி மற்றும் அமைச்சர் ஜெயகுமாருக்கு அக்குடும்பத்தினர் நன்றி தெரிவித்து உள்ளனர்.